நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின், கவுதம் அதானி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச செஸ் தொடர் நார்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த மே 30 ஆம் தேதி நடந்த 3-வது சுற்றில் வெள்ளைக் காய்களுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற 5வது சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரும் சாம்பியனுமான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்து அசத்தியுள்ளார்.
இந்த அடுத்தடுத்த வெற்றியின் மூலம் செஸ் உலக தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் பிரக்ஞானந்தா நுழைந்துள்ளார்.
மேலும் இதனால் நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 15-ந்தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்ள உள்ளார்.
இந்த வெற்றியை அடுத்து அவருக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
https://x.com/NorwayChess/status/1796992719081844942
செஸ் உலகமே வியந்து நிற்கிறது!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது, “நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்; முதல் 10 இடங்களுக்குள் வந்த பிரக்ஞானந்தாவை வரவேற்கிறோம். உலகின் முதல் நிலை வீரர் கார்ல்சன், இரண்டாம் நிலை வீரர் ஃபேபியானோவை வீழ்த்தியது வியத்தகு சாதனை; உங்கள் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியந்து நிற்கிறது” என்று ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
அதே போன்று உலக பணக்காரர்களில் ஒருவரான பிரக்ஞானந்தாவின் ஸ்பான்சருமான கவுதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “உலகின் நம்பர் 1 மற்றும் நபர் 2 செஸ் வீரர்களை வீழ்த்தி நார்வே செஸ் தொடரில் அபாரமான வெற்றியை பிரக்ஞானந்தா பெற்றுள்ளது வியக்கவைக்கிறது. வெறும் 18 வயதில் இதை நிகழ்த்திக்காட்டிய நீங்கள் இன்னும் பல சாதனைகளைப் படைப்பீர்கள்.. நமது மூர்வண தேசியக் கொடியை உலக அரங்கில் உயரத்தில் பறக்கச்செய்யுங்கள்.. வாழ்த்துக்கள்” என்று அதானி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே உலகின் இரண்டாம் நிலை வீரர் ஃபேபியானோவை வீழ்த்திய பின்னர் அரங்கில் பிரக்ஞானந்தா வீறுநடை போட்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா