ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் : விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அனுஷ்கா சர்மா

Published On:

| By christopher

மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தான் காரணம் என்று விமர்சனம் எழுந்து வரும் நிலையில், அவரை பாராட்டி நடிகை அனுஷ்கா சர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறியது.

ஆஸ்திரேலியா அணியின் அபார பந்துவீச்சை சமாளித்து கடைசி வரை போராடிய இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடியின் பொறுப்பான ஆட்டம் இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.

ஆனால் அபாரமாக ஆடி அரைசதம் கடந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 2-வது ரன்னுக்கு ஓடிய போது, துரதிர்ஷ்டமாக ரன்-அவுட் ஆகி 52 ரன்களில் வெளியேறினார்.

https://twitter.com/Ataullah84/status/1629077173310197760?s=20

ஏறக்குறைய 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தோனி ரன் அவுட் ஆனதை இது பிரதிபலித்தது.

முக்கியமான நேரத்தில் நிகழ்ந்த ஹர்மன்ப்ரீத் கவுரின் ரன்-அவுட்டை தொடர்ந்து மேலும் இந்திய அணியில் மேலும் சில விக்கெட்டுகள் சரிய ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது.

கடைசி நேரத்தில் தீப்தி சர்மா போராடியும் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோற்றது

உலகக்கோப்பை கனவு நெருங்கி வந்து கலைந்த நிலையில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் உட்பட இந்திய வீராங்கனைகள் பலரும் கண்கலங்கியபடி இருந்தனர்.

இந்திய மகளிர் அணியின் இந்த தோல்விக்கு கேட்ச் மிஸ்ஸிங், டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் என பல காரணங்கள் இருப்பினும் முக்கியமான கட்டத்தில் அவுட் ஆன கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை தான் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன், ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் ஆனதை ’சிறுபிள்ளைத்தனம்’ என்று விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் இந்திய வீரர் விராட்கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கண்ணீரை மறைக்க கூலிங் கிளாஸ் போட்டு நின்ற ஹர்மன்ப்ரீத் கவுரின் வைரலான வீடியோவை பதிவிட்டு “உங்களையும், உங்களது அணியையும் நினைத்து எப்போதும் பெருமைப்படுகிறேன் கேப்டன்” என்ற தெரிவித்துள்ளார்.

actress anushka sharma support

அரையிறுதியில் தோற்ற நிலையிலும், கடைசி வரை போராடிய இந்திய அணிக்கும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ஆதரவு தெரிவித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனுஷ்கா சர்மா, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் பயோகிராபியான ’சக்தா எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஓ.பன்னீர்செல்வம் தாயார் மரணம்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நீரிழிவு நோயை குணப்படுத்த யோகா உதவுமா?