ஜெய் ஷா நேற்று வெளியிட்ட ஆசிய அணிகளுக்கான 2023-24 போட்டி அட்டவணை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் கூறிய கருத்துக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா நேற்று (ஜனவரி 5) ஆசிய அணிகளுக்கான 2023-24 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டி அட்டவணையை வெளியிட்டார்.
பாகிஸ்தான் வாரியம் எதிர்ப்பு
இந்நிலையில் ஜெய் ஷா வெளியிட்ட போட்டி அட்டவணை குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி தனது அதிருப்தியை சமூக வலைதளத்தில் நேற்று தெரிவித்தார்.
ஜெய் ஷாவின் ட்விட்டை ரீ ட்விட் செய்து அவர் வெளியிட்ட பதிவில், “ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு 2023-24 ஆண்டுக்கான போட்டி அட்டவணையை, குறிப்பாக பாகிஸ்தானில் நடக்க இருக்கும் ஆசிய கோப்பை தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருதலைப்பட்சமாக வழங்கியதற்கு ஜெய் ஷாவுக்கு நன்றி.
நீங்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கான அட்டவணையையும் வழங்க வேண்டும். விரைவாக பதில் தந்தால் பாராட்டப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஏசிசியில் உள்ள இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மற்ற உறுப்பினர் வாரியங்கள் எதுவும் கூறாத நிலையில், பாகிஸ்தான் வாரிய தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
சேத்தியின் கருத்துகள் ஆதாரமற்றவை
இந்நிலையில் நஜாம் சேத்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏசிசி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜாம் சேத்தி, ஏசிசி தலைவர் ஜெய் ஷா ஒருதலைப்பட்சமாக போட்டி அட்டவணையை இறுதி செய்து அதை வெளியிட்டுள்ளார் என்று கூறியது எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
ஏசிசி இதனை தெளிவுபடுத்த விரும்புகிறது. 2023 – 2024 போட்டிகளின் அட்டவணை உருவாக்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் போட்டி அட்டவணையானது வளர்ச்சி குழு மற்றும் நிதி சந்தைப்படுத்தல் குழு ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது.
பின்னர் டிசம்பர் 22ம் தேதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உட்பட பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் போட்டி அட்டவணை தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
சில உறுப்பினர் வாரியங்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்டாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து கருத்துகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து எதுவும் பெறப்படவில்லை.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சமூக ஊடக தளத்தில் பிசிபி தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ள கருத்துகள் ஆதாரமற்றவை. இதனை ஏசிசி கடுமையாக மறுக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா போட்ட புதிய உத்தரவு!
இணைய சேவை முடங்கினாலும் இனி ’வாட்ஸ் அப்’ பயன்படுத்தலாம்!