மதுரை கீழக்கரை அருகே பிரமாண்ட பொருட்செலவில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) காலை திறந்து வைத்தார்.
தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவங்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய ஆரம்பித்தன. காளையர்களும் அவற்றை கட்டித்தழுவி தங்களது வீரத்தை நிரூபித்தனர்.
5௦௦ காளைகளும், 3௦௦ வீரர்களும் கலந்து கொண்ட இந்த போட்டி சற்றுமுன் முடிவுக்கு வந்தது. மொத்தம் 6 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் 1௦ காளைகளை அடக்கி, சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பெற்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடத்தை தவறவிட்ட அபிசித்தர், இன்று நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
6 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன், பரத் இருவரும் இரண்டாவது இடம் பிடித்தனர். 4 காளைகளை அடக்கி வீரர் மணிகண்டன் 3-வது இடம் பிடித்தார்.
இதேபோல புதுக்கோட்டையை சேர்ந்த கணேஷ் கருப்பையா என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.
திருச்சி அணைக்கரை வினோத் என்பவரது காளை 2-வது இடத்தையும், மதுரை அண்ணா நகர் பிரேம் என்பவரது காளை 3-வது இடத்தையும் பிடித்தது.
சிறந்த காளை உரிமையாளர் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அமைச்சர் மூர்த்தி மஹேந்திரா தார் ஜீப் நிறுவனத்தின் சாவி மற்றும் ரூபாய் 1 லட்சம் பரிசுத்தொகை ஆகியவற்றை வழங்கினார். இதை அபிசித்தர், கணேஷ் கருப்பையா இருவரும் பெற்றுக் கொண்டனர்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாநாடு முடிந்து… உதயநிதி கூட்டும் திடீர் இளைஞரணிக் கூட்டம்! எதற்காக?
அமலாக்கத் துறை வழக்கு : பொன்முடி மகன் ஆஜர்!