அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரின் போது, பெங்களூரு ஸ்டேடியத்தில் மன்னிப்பு மற்றும் நன்றி கோர வருவேன் என்று டிவில்லியர்ஸ் கூறினார்.
சர்வதேச அளவில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக ரசிகர்களை கவர்ந்தவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ். இவர் களத்தில் இருந்தால் மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பந்துகள் பறக்கும்.
இதனால் அவரை கிரிக்கெட் ரசிகர்கள் “MR.360 டிகிரி” என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
அவருக்கு தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு.
அதிலும் ஐபிஎல் தொடரில் 2011 முதல் 2021 வரை பெங்களூரு அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ்க்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மே 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
இதனால் ஏமாற்றமடைந்த அவரது ரசிகர்கள் அவரை ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட வருமாறு கேட்டு வந்தனர்.
கண் அறுவை சிகிச்சை!
இதற்கிடையே நேற்று சமூக வலைதளத்தில் ரசிகர்களுடனான உரையாடலின் போது தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த முக்கியமான அறிவிப்பை டிவில்லியர்ஸ் பகிர்ந்து கொண்டார்.
அவர், தனது விழித்திரையில் ஏற்பட்ட பிரச்சனைக்காக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், அதனால் தன்னால் இனி கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் தெரிவித்தார்.
விராட் கோலி தான் முதல் விருந்தினர்!
எனினும் வரும் காலங்களில் தான் செய்யப்போவது குறித்தும் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரின் போது, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு இரண்டு காரணங்களுக்காக வருவேன் என்று டிவில்லியர்ஸ் கூறினார்.
10 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்சிபி அணியில் விளையாடிய தனக்கு ஆதரவு அளித்தற்கு நன்றி தெரிவிக்கவும், ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கவும் வருவேன் என்று கூறினார்.
மேலும் தான் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், தனது முதல் நிகழ்ச்சியில் நண்பரும், சக வீரருமான விராட்கோலியை சிறப்பு விருந்தினராக பங்கேற்க வைப்பேன் என்று கூறினார்.
பயிற்சியாளர் பதவியில் ஆர்வமில்லை!
அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுடன் தனது அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக கூறிய அவர், அதேவேளையில் பயிற்சியாளாராக பணியாற்ற விருப்பமில்லை. 18 ஆண்டுகளாக கிரிக்கெட் என்று மட்டுமே இருந்துவிட்ட நிலையில் இனிமேல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அவர்கள் தானே எல்லாம். என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், டிவில்லியர்ஸ் கூறிய கருத்தால் அவரது ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
பெண்கள் ஆசிய கோப்பை டி20: இந்திய அணி வெற்றி!
இந்தியாவில் 2025-க்குள் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறுவார்கள்!