இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா ஹைதராபாத் அணியின் முடிவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கேப்டனாக இருந்த எய்டன் மார்கரமிற்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்சை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய கேப்டனாக நியமித்து, நேற்று (மார்ச் 4) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து ஹைதராபாத் அணியின் 10-வது கேப்டன் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றிருக்கிறார். இந்தநிலையில் ஆகாஷ் சோப்ரா இந்த கேப்டன் மாற்றத்தினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,” நீங்கள் பேட் கம்மின்சை கேப்டனாக நியமனம் செய்துள்ளீர்கள். அவரின் சமீபத்திய ஐபிஎல் ரன்களை கவனித்தீர்களா? பந்துவீச்சில் ஏராளமான ரன்களை விட்டுக்கொடுத்துள்ள கம்மின்ஸ் பேட்டிங்கிலும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
அதேபோல பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களிலும் அவர் பந்து வீசியதில்லை. ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாடுவாரா? என்று நிச்சயம் இல்லாத ஒரு வீரருக்காக நீங்கள் பெரும்தொகையை செலவு செய்திருக்கிறீர்கள்.
அவர் உலகக்கோப்பையை வென்றிருந்தாலும் கூட, டி2௦ கோப்பையினை வென்றதில்லை. கம்மின்ஸிற்கு பதிலாக ஹென்ரிச் கிளாஸன், டிராவிஸ் ஹெட் இருவரில் ஒருவரை கேப்டனாக நியமித்து இருக்கலாம். மார்க்ரம் ஹைதராபாத் அணிக்காக நிறைய செய்துள்ளார்.
SA2௦ தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கபே அணியினை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சாம்பியன் ஆக்கினார். ஆனால் ஐபிஎல் தொடரில் பெரிதாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. அணிக்குள் நிலவிய குழப்பங்களும் அதற்கு ஒரு காரணம்,” என்றார்.
ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி இருக்கும் இந்த குறைகளை ஹைதராபாத் அணியும் நன்கு அறிந்திருக்கும். என்றாலும் கம்மின்ஸ் மீது நம்பிக்கை வைத்து அவரை அந்த அணி கேப்டனாக நியமித்துள்ளது.
தன்மீதான விமர்சனங்களை மாற்றிக்காட்டி ஹைதராபாத் அணியினை கம்மின்ஸ் சாம்பியன் ஆக்குவாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதமர் மோடியை சந்தித்த பிடி.ஆர் -பின்னணி என்ன?
‘தக் லைஃப்’ படத்தில் இருந்து முன்னணி நடிகர் விலகல்!