இறுதிப்போட்டியில் சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் இன்று (டிசம்பர் 12) படைத்துள்ளார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன் மோதினர்.
மொத்தம் 14 சுற்றுகளாக நடைபெறும் இறுதிப்போட்டியில், யார் முதலில் 7.5 புள்ளிகளை பெறுகிறாரோ, அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இதுவரை நடந்த 13 சுற்றுப் போட்டிகளில் குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 வெற்றி, 9 டிரா என தலா 6.5 புள்ளிகளில் இருந்தனர்.
இந்த நிலையில் சாம்பியனை தீர்மானிக்கும் கடைசி சுற்று இன்று தொடங்கியது. இதில் வெள்ளை நிற காய்களுடன் சீனாவின் டிங் லிரனும், கறுப்பு நிற காய்களுடன் குகேஷும் களமிறங்கினர்.
நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இருவரும் வேகம் காட்ட, ஒரு கட்டத்தில் ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்தது. தொடர்ந்து 32வது நகர்த்தலில் இருவரும் ராணியை இழந்தனர். எனினும் டிரா செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த குகேஷ், 58வது நகர்த்தலில் லிரனை வீழ்த்தினார்.

இதன்மூலம் தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார்.
அதேவேளையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் 18 வயதான குகேஷ் படைத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரசிகர்களுக்கு பர்த்டே ’வைப்’ கொடுத்த ரஜினி… அசத்தும் கூலி பட அப்டேட்!
முதல் ’வைக்கம் விருது’ பெற்ற புரட்சி எழுத்தாளர்! யார் இந்த தேவநூர் மகாதேவா?