ஆசிய போட்டிகள் 2023: 60 பதக்கங்களை வென்ற ‘இந்தியா’

Published On:

| By christopher

19வது ஆசிய போட்டிகள் தொடரில், இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், துப்பாக்கி சுடுதல், குதிரை ஏற்றம், படகோட்டம், ரோவிங், ஸ்குவாஷ், டென்னிஸ் என அனைத்து விளையாட்டுகளிலும் அசத்திய இந்திய அணி தற்போது தடகள போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து வருகிறது.

அந்த வகையில், 9வது நாளில் மட்டும் 3 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் 4வது இடத்தில் தொடர்கிறது.

இன்று காலையிலேயே, ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் மகளிருக்கான ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ ரிலே ரேஸ் பிரிவில், இந்தியா சார்பில் பங்கேற்ற ஆரதி கஸ்தூரி ராஜ், ஹீரல், சஞ்சனா மற்றும் கார்த்திகா ஆகியோர் அடங்கிய அணி வெண்கல பதக்கத்தை வென்று பதக்க கணக்கை துவங்கி வைத்தது.

இவர்களை தொடர்ந்து, அதே ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டின் ஆடவர் ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ ரிலே ரேஸ் பிரிவில், ஆர்யன் பால், ஆனந்த், சித்தாந்த் மற்றும் விக்ரம் ஆகியோர் அடங்கிய அணி, இந்தியாவுக்கான 2வது வெண்கலப் பதக்கத்தை வென்றது.

பின், டேபிள் டென்னிஸ் ஆட்டத்தின் மகளிர் இரட்டையர் பிரிவில் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த அயிகா முகர்ஜி – சுதிர்தா முகர்ஜி இணை, இந்த பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. ஆசிய போட்டிகளில், டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் ஆட்டத்தில், இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளை தொடர்ந்து, மாலை நடைபெற்ற தடகள போட்டிகளில், இந்திய வீரர், வீராங்கனைகள் 3 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை கைப்பற்றினர்.

மகளிருக்கான 3000 மீ ஸ்டீபில்சேஸ் பிரிவில், இந்தியாவின் பருல் சவுத்ரி வெள்ளி பதக்கத்தையும், பிரீத்தி வெண்கல பதக்கத்தையும் வென்று அசத்தினர்.

மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், அன்சி சோஜன் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

 

பின் நடைபெற்ற, 4 x 400 மீ கலப்பு ரிலே பிரிவில், இந்தியாவுக்காக போட்டியிட்ட முகமது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ரமேஷ் ராஜேஷ் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய அணி, 3வது இடத்தை பிடித்தது.

ஆனால், இந்த போட்டியில் 2ஆம் இடம் பிடித்த இலங்கை அணி, தனக்கான பாதையில் இருந்து விலகியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உலகக்கோப்பை 2023: 10 அணிகள்… ஒரு டிராபி… வெல்லப்போவது யார்?

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு: என்ன காரணம்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel