44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பர டீசரை வெளியிட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இந்தப் போட்டி, முதல்முறையாக தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. இப்போட்டி ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் வர இருக்கின்றனர். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற இருக்கும் இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக தமிழக அரசால், செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பர பட ஷூட்டிங் சென்னை நேப்பியர் பாலத்தில் ஜூலை 7ம் தேதி நடைபெற்றது. அன்று காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை நடந்த இந்த விளம்பர பட ஷூட்டிங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விளம்பர படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்பில் உருவான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூலை 15) வெளியிட்டார். இந்த வீடியோவில் தொடங்கும் ‘வெல்கம் டு நம்ம ஊரு’ பாடல் காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் தோன்றுகிறார்கள்.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழகத்துக்கு வரவிருக்கும் அனைவரையும் வரவேற்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த டீசரில் பேசியிருக்கிறார். இந்த டீசரை வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை. அதனை எதிர்வரும் 28ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கிவைக்க இருக்கிறார்கள். போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு வீடியோ தயாரித்துள்ளார். அதன் டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்