லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 7) முதல் 11ஆம் தேதி வரை களைகட்டவுள்ளது.
இதில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் அணிகளாக கருதப்படும் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. எனினும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் முத்திரை பதிக்கும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணிக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
20 ஆண்டுகளுக்கு பிறகு பழித்தீர்க்கும் முனைப்பில் இந்தியா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒரு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது இது 2வது முறையாகும்.
இரு அணிகளும் கடைசியாக 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சந்தித்தன. அந்த ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது.
அதனைத்தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தற்போது இரு அணிகளும் மோதுகின்றன. இதனால் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தோல்வியை வெற்றியாக மாற்ற போராடும்!
என்னதான் பாஸ்ட் புட் வேகத்தில் டி20, டி10 போட்டிகள் வந்துவிட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் தான் கிரிக்கெட்டின் ஆத்மா உறைந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அதன்படி வேகமாக மாறி வரும் உலகில் டெஸ்ட் போட்டிகளிலும் சுவாரசியத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கொண்டு வரப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்தொடரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இறுதிப்போட்டி நடத்தப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்த இந்தியா லண்டன் ஓவல் மைதானத்தில் நடப்பாண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற 19 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றிகளை பதிவு செய்த ஆஸ்திரேலியாவும், 18 டெஸ்ட் போட்டிகளில் 10 வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணியும் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.
இதனால் கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கோப்பையை தவறவிட்ட இந்தியா இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கட்டாயம் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.
கேப்டனின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிறப்பானதாக அமைந்துள்ளது. கேப்டன் ரோஹித்துக்கு இது முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியாகும். எனவே இதில் கட்டாயம் வென்று வரலாற்றில் இடம்பிடிக்கவே ஒட்டுமொத்த அணியுடன் அவர் முயற்சி செய்வார்.
அத்துடன் ஐ.பி.எல் தொடருக்கு முன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளின் பலம்!
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, புஜாரா, என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை உள்ளது.
மேலும் உள்ளூர் போட்டிகளில் அசத்தி, நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியிலும் தனது அட்டகாச பார்மை ரஹானே வெளிபடுத்தினார். இதனால் மீண்டும் வெள்ளை நிற ஜெர்சியுடன் இந்திய அணிக்கு நுழையும் வாய்ப்பை பெற்றுள்ள அவர் அணிக்கு பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார் விபத்தால் காயத்திலுள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-க்கு பதில் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இஷான் கிஷான் மாற்று வீரராக இடம்பெற்றுள்ளார்.
இவர்களோடு அஸ்வின் மற்றும் ஜடேஜா என கிரிக்கெட் உலகின் அதிசிறந்த இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள், பேட்டிங்கிலும் ஜொலிப்பது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும்.
இந்தியாவின் காயமடைந்த வேக வேங்கை பும்ராவிற்கு பதிலாக முகமது சமியும், அவருக்கு தோள் கொடுக்க முகமது சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோரும் உள்ளனர்.
அதே நேரத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், கோப்பையை வசப்படுத்த எல்லா வகையிலும் போராடும் என்று எதிர்பார்க்கலாம்.
வார்னர் மற்றும் ஸ்மித் என இரண்டு அனுபவ பேட்ஸ்மேன்களுடன், கவாஜா, லேபுசேன், அலெக்ஸ் ஹேரி ஆல்ரவுண்டர் கிரீன் என வலுவான பேட்டிங் வரிசையை கட்டமைத்துள்ளது ஆஸ்திரேலியா.
பந்துவீச்சில் டெஸ்ட் போட்டிக்கு என்றே தன்னை தகவமைத்து கொண்டுள்ள மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் மிரட்ட காத்திருக்கின்றனர். சுழலில் அசத்த நாதன் லைனை களமிறக்குகிறது ஆஸ்திரேலியா.
இப்படி இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்கள் நடைபெறும் ஆட்டத்தில் அனல் பறக்கும். கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலுக்கும் இரு அணிகளும் விருந்து படைக்கும்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணி விவரங்கள்:-
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பாரத், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனடக், உமேஷ் யாதவ்.
ரிசர்வ் வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்.
ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், ஜோஷ் இங்கிலிஸ், டாட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
ரிசர்வ் வீரர்கள்: மிட்ச் மார்ஷ், மாட் ரென்ஷா
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உக்ரைன் அணையின் மீது ரஷ்யா தாக்குதல்: வெள்ளம் ஏற்படும் அபாயம்!