T20 World Cup 2024: சாதிப்பாரா கோலி? முறியடிக்கப்பட காத்திருக்கும் 5 சாதனைகள்!

விளையாட்டு

2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. ஜூன் 2 துவங்கும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29 அன்று நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறும் அணிகளுக்கு, மொத்தம் 9 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் நிலையில், பல சாதனைகள் இந்த தொடரில் முறியடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. விராட் கோலி – 319 ரன்கள்

2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அபாரமாக விளையாடிய விராட் கோலி, அந்த தொடரில் 319 ரன்களை சேர்த்திருந்தார். தற்போது வரை, ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக அதுவே உள்ள நிலையில், தற்போது இந்த தொடரில் அந்த சாதனை முறியடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி ‘ஆரஞ்சு கேப்’ வென்றவர் விராட் கோலி. அவரது இந்த சாதனையை அவரே முறியடிக்கக்கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.

2. கிறிஸ் கெய்ல் – 100* (48)

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில், மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ‘சூப்பர் 10’ ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தியிருப்பார்.
தற்போதுவரை, டி20 உலகக்கோப்பை தொடரில் விளாசப்பட்ட அதிவேக சதமாக, கிறிஸ் கெய்லின் இந்த சதமே உள்ளது. தற்போது டி20 கிரிக்கெட்டின் பரிணாமம் மிக அதிரடி ஆட்டம் என்ற சூழலுக்கு சென்றுள்ள நிலையில், இந்த தொடரில் இந்த சாதனையும் எளிதில் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. மஹேல ஜெயவர்த்தனே – 111 ஃபோர்கள்

டி20 உலகக்கோப்பை ஆட்டங்களில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே 111 ஃபோர்களை அடித்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் அதிக ஃபோர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 103 ஃபோர்களுடன் அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். இந்நிலையில், இந்த தொடரில் அவரின் சாதனையை முறியடித்து, டி20 உலகக்கோப்பையில் அதிக ஃபோர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. ஏபி டி வில்லியர்ஸ் – 23 கேட்ச்கள்

டி20 உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை 23 கேட்ச்களை பிடித்துள்ள டி வில்லியர்ஸ், அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், 21 கேட்ச்களுடன் 2வது இடத்தில் உள்ள டேவிட் வார்னர் இந்த தொடரில் அந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலா 16 கேட்ச்களுடன் இப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள ரோகித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அவருக்கு போட்டியளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. சாதிக்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா

2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக்கோப்பை உள்ளிட்ட கோப்பைகளை ஆஸ்திரேலியா ஏற்கனவே வென்றுள்ள நிலையில், இந்த டி20 உலகக்கோப்பை தொடரையும் அந்த அணி வென்றால், ஒரு நேரத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெறும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகிழ்

அவர் விவேகானந்தா… இவர் வெறுப்பானந்தா: திருமாவளவன் விமர்சனம்!

ஆபாச வீடியோக்கள்: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு 6 நாள் போலீஸ் கஸ்டடி!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *