T20 World Cup 2024: 2024 ஐபிஎல் தொடர் மே 26 அன்று நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த சில நாட்களிலேயே ஜூன் 2 அன்று 2024 டி20 உலகக்கோப்பை தொடர் துவங்கவுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள இந்த தொடரில், இந்தியா ஜூன் 5 அன்று தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான ஆயத்த பணிகளை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தற்போதே துவங்கியுள்ளது.
இப்படியான சூழலில், 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில், இந்த 2 பேருமே தலா ஒரு சதத்துடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விராட் கோலி 7 போட்டிகளில் 361 ரன்கள் விளாசி, ஆரஞ்சு கேப்பை தன்வசம் வைத்துள்ளார். ரோகித் சர்மா 6 போட்டிகளில் 261 ரன்கள் குவித்து அசத்தி வருகிறார்.
முன்னதாக, டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலியை நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஐபிஎல் தொடரில் அவரின் அபாரமான ஆட்டத்தை கண்டு பிசிசிஐ தனது முடிவை பின்வாங்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இவர்கள் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க, பேக்-அப் துவக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் யசஷ்வி ஜெய்ஸ்வாலின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதேபோல, 2023 டியோதர் ட்ரோபி துவங்கி, 2023 சையத் முஸ்தக் அலி ட்ரோபி, 2024 ஐபிஎல் தொடர் என அடுத்தடுத்த தொடர்களில், பேட்டிங் & பந்துவீச்சு என 2 பிரிவுகளிலும், ரியான் பராக் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவரின் மீது பிசிசிஐ-யின் பார்வை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா முறையாக பந்துவீசினாலே அவரை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ஜிதேஷ் சர்மா, துருவ் ஜுரேல் என பல பேரிடையே ஒரு மிகப்பெரிய ஓட்டப்பந்தயம் நடைபெற்றுவரும் நிலையில், அந்த பந்தயத்தில் தற்போது தினேஷ் கார்த்திக்கும் இணைந்துள்ளார். இருப்பினும், பிசிசிஐ-யின் முதல் சாய்ஸ் ரிஷப் பண்ட் என்றும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
வாக்களிக்கும் உரிமையையும், பொறுப்பையும் கையிலெடுங்கள் : சத்குரு
பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தகுதி நீக்கமா?