83 ரன்களுக்கு ஆல்-அவுட் : இந்தியாவிடம் படுதோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா!

விளையாட்டு

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 37வது லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை செய்தார். 2 அணிகளும் எந்த மாற்றமும் இன்றி அதே 11 பேரை கொண்டு களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்தியாவுக்கு, கேப்டன் ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் விளாசி அதிரடி துவக்கம் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் அய்யர், பொறுப்பாக விளையாடி சீரான வேகத்தில் இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 77 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 101 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

இறுதியில் சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 20 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்கள் என கேமியோ கொடுக்க, இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் சேர்த்தது.

இந்த தொடரில் தொடர்ந்து பல இமாலய ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்க அணிக்கு, இது எளிய இலக்கு போல தென்பட்டாலும், தொடர்ந்து சேஸிங்கில் சவால்களை சந்தித்துவரும் அந்த அணி, இந்த போட்டியிலும் துவக்கத்திலேயே சறுக்க தொடங்கியது.

2வது ஓவரில் குவிண்டன் டி காக், 9வது ஓவரில் டெம்பா பவுமா, 10வது ஓவரில் எய்டன் மார்க்ரம் என, 10 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்காவின் 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஃபெவிலியன் திரும்பினர்.

தொடர்ந்து, முகமது ஷமியின் வேகம், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவின் சுழல் ஆகியவற்றுக்கு நடுவில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா, சரியும் சீட்டுக்கட்டு போல் தங்களது விக்கெட்களை இழந்தது.

இறுதியில், 28வது ஓவரில் ஆல்-அவுட் ஆன தென் ஆப்பிரிக்கா, 83 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இதன்மூலம் 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவுக்காக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இந்த 2023 உலகக்கோப்பை தொடரில், இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, அந்த 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த போட்டியில், 101 ரன்கள் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ள விராட் கோலி, இப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

கமல் – மணி ரத்னம் “KH 234” டைட்டில் ரிலீஸ்!

அமலா பாலுக்கு டும்… டும்…டும்… : வைரலாகும் புகைப்படங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *