இந்தோனேசியாவில் நேற்று (அக்டோபர் 1) நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.
அரேமா எஃப்சி மற்றும் பெர்சியா சுரபயா அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த போட்டியின் இறுதியில் பெர்சியா சுரபயா 3-2 என்ற கோல் கணக்கில் அரேமா எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரேமா அணி தோல்வியை சந்தித்ததால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாத அரேமா அணியின் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அரேமா மற்றும் பெர்சியா அணி ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் அவர்களது வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசினர்.
கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் ஒரே நேரத்தில் மைதானத்தின் நுழைவு வாயில் நோக்கிச் சென்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் மைதானத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்திய நேரப்படி இன்று காலை 8 மணியளவில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கலவரத்தின் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்குக் கால்பந்து போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 38,000 இருக்கைகள் கொண்ட மைதானத்திற்குள் 42,000 பேர் போட்டியைப் பார்ப்பதற்கு உள்ளூர் கால்பந்து கமிட்டியால் அனுமதிக்கப்பட்டதே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்று தெரியவருகிறது.
இதுகுறித்து கால்பந்து அசோசியேஷன் விசாரணை நடத்தி வருகிறது.
1990 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கால்பந்து தொடர்புடைய கலவரங்களால் 86 ரசிகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் ஒரே நாளில் 174 கால்பந்து ரசிகர்கள் உயிரிழந்திருப்பது உலகளவில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
போனில் ’ஹெலோ’ சொல்லக் கூடாது, ‘வந்தேமாதரம்’ தான்: அரசு உத்தரவு!
ஸ்ப்ரே ஆடை: அமெரிக்க மாடலின் அசத்தல் ரேம்ப் வாக்!