“1% வாய்ப்பு…”: கோலியின் RCB இப்படி செய்வது இது முதல் முறை அல்ல!

Published On:

| By indhu

2024 ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொடுத்த கம்-பேக் கதையை கேட்டால், உங்கள் வெற்றிக்கு வெறும் 1% வாய்ப்பு மட்டுமே இருந்தாலும் கூட, அந்த 1% வாய்ப்பிற்காக கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் போராடுங்கள் என்ற உத்வேகம், கேட்கும் ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கும்.

இதை எங்கோ கேட்டது போல உள்ளதா? ஆம், இது ‘கிங்’ கோலி கூறிய மந்திர வார்த்தைகள் தான். முன்னொரு காலத்தில், இளைஞர்களுக்கு மத்தியில் ஒருமுறை உரையாற்றிய விராட் கோலி, இவ்வாறு பேசியிருப்பார்.

“நமது வெற்றிக்கு 1% வாய்ப்பு மட்டுமே இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் அந்த 1% மட்டுமே போதுமானது. ஆனால், அங்கு என்ன முக்கியம் என்றால், அந்த 1% குறித்து உங்கள் எண்ணம் என்ன என்பது தான். நீங்கள் அனைத்தையும் கொடுத்து போராடி அந்த 1% வாய்ப்பை 10% ஆக மாற்ற தயாராக உள்ளீர்களா? அந்த 10% வாய்ப்பை 30% ஆக உயர்த்த தயாராக உள்ளீர்களா?”

“அப்படி நீங்கள் போராடினால், கண்டிப்பாக அங்கு ஒரு மாயாலாஜம் நிகழும்”

https://twitter.com/RCB_Hiv3/status/1791913723764035969?t=ihXuJ2Ubse4RE75rF2tUcw&s=19

வாழ்வில் தளர்ந்து நிற்கும் ஒவ்வொரு நபருக்கும் உத்வேகம் அளிக்கும் இந்த வார்த்தைகளுக்கு, இன்று அவரே ஒரு எடுத்துக்காட்டாக எழுந்து நின்றுள்ளார்.

2024 ஐபிஎல் தொடரில், விளையாடிய முதல் 8 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல 1% மட்டுமே வாய்ப்பு இருந்தது.

ஆனால், அங்கிருந்து அடுத்து விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் அபார வெற்றி பெற்று, அந்த 1% வாய்ப்பை 10% ஆக, 10% வாய்ப்பை 30% ஆக மெல்ல மெல்ல உயர்த்தியது, இந்த சிவப்புப் படை.

ஒரு கட்டத்தில், முதல் அணியாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிடும் என்ற நிலையில் இருந்த பெங்களூரு அணி, தன்னிடம் இருந்த அந்த 1% வாய்ப்பை சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 100% ஆக மாற்றி, 4வது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முன்பு கூறியதுபோல, அவர் கூறிய வார்த்தைகளை அவரே நிகழ்த்திக் காட்டியுள்ளார், விராட் கோலி.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு, அவரின் இந்த வார்த்தைகள் மீண்டும் அவரது காதில் ஒலித்திருக்குமோ என்னவோ. கண்களில் நீர் பொங்க, ஆக்ரோஷத்துடனான அவரின் கொண்டாட்டம், காண்பவர்களை நெகிழச் செய்தது என்றே கூற வேண்டும்.

கோலியும் அவரது சிவப்புப் படையும் இவ்வாறு மாயாஜாலங்களை நிகழ்த்துவது இது முதல் முறை அல்ல.

2016 ஐபிஎல் தொடர். 2016-ஆம் ஆண்டு என்றாலே அது கோலியின் ஆண்டுதான். ஐபிஎல் தொடர் துவங்கி சர்வதேச கிரிக்கெட் வரை பேட்டிங்கில் அவருக்கு அந்த ஆண்டு ஒரு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது.

அப்படியான 2016 ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணி முதலில் விளையாடிய 10 போட்டிகளில் 4-இல் மட்டுமே வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்ற சந்தேகத்தில் இருந்தது.

ஆனால், லீக் சுற்று ஆட்டத்தில் அடுத்து விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பெற்றது. அதுவும் சாதாரண வெற்றிகள் அல்ல. குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 144 ரன்கள் வித்தியாசத்தில், கொல்கத்தாவுக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில், பஞ்சாப் அணிக்கு எதிராக 82 ரன்கள் வித்தியாசத்தில், டெல்லி அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் என ஒவ்வொன்றும் அபார வெற்றிகள்.

ஒரு கட்டத்தில் பிளே-ஆஃப் செல்லுமா என்ற நிலையில் இருந்த பெங்களூரு, அந்த தொடரில் ரன்-ரேட் அடிப்படையில் நேரடியாக 2வது இடம் பிடித்து, குவாலிஃபையர் 1 சட்டத்திலேயே விளையாடியது.

அந்த ஆட்டத்திலும், குஜராத் அணியை வீழ்த்திய பெங்களூரு, இறுதிப்போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்டது.

தற்போது, அதேபோல ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அன்று தவறவிட்ட அந்த கோப்பையை, இம்முறை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் பிளே-ஆஃப் ஆட்டங்களை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூப்பர் ஹூ்யூமன் கதையில் சத்யராஜ்: வெப்பன் படக்குழு பேட்டி!

தோனி அடித்த சிக்ஸ் தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமா?