”வந்து விளையாடிட்டு ஒரே நாள்ள போயிடுங்க” : பாகிஸ்தான் ஐடியா!
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவதில்லை. குறிப்பாக, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டுக்கு அதற்கு பிறகு சென்றதே இல்லை.
இதற்கிடையே, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி , மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது . பாகிஸ்தான் சென்று இந்திய அணி விளையாட மத்திய அரசு இதுவரை அனுமதிக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல முறை பலவிதங்களில் கோரிக்கை விடுத்தும் பிசிசிஐ- யும் மத்திய அரசும் கண்டு கொள்ளவே இல்லை.
பாகிஸ்தானுக்கு வரவில்லையெனில் இந்தியாவை புறக்கணித்து விட்டு தொடரை நடத்துவோம் என்று அந்நாட்டு வாரியம் தெரிவித்தது. ஆனால், இந்தியா போட்டியில் பங்கேற்கவில்லை எனில், சாம்பியன்ஸ் டிராபிக்கு ஸ்பான்சர்ஷிப் குறைந்து விடும். மீடியா ரைட்சும் குறைந்த விலைக்குதான் போகும். இதனால் இந்தியா இல்லாமல் சாம்பியன்ஸ் ட்ராபியை நடத்த முடியாது என்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
இதனால், இந்திய அணியை தங்கள் நாட்டில் விளையாட வைக்க பாகிஸ்தான் புதிய ஐடியாவை உருவாக்கியுள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் பிப்ரவரி 20, 23, மார்ச் 2 ஆகிய தேதிகளில் இந்தியா தனது லீக் போட்டிகளில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது,.
அதனால், பாதுகாப்பு பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக இந்தியா விளையாடும் போட்டிகளை இந்திய எல்லைக்கு அருகிலுள்ள லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் இந்திய அணியை லாகூரிலிருந்து உடனடியாக அருகிலுள்ள சண்டிகருக்கு திருப்பியனுப்ப பாகிஸ்தான் வாரியம் முடிவெடுத்துள்ளது. அதாவது, பாகிஸ்தானில் இந்திய அணி தங்கியிருக்காது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி லாகூர், கராச்சி, ராவல்பின்டி நகரங்களில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் மார்ச் 9 ஆம் தேதி லாகூரில் நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
20 ஆண்டுகளில் செவ்வாயில் மனித குடியிருப்பு… மஸ்க் திட்டம்… அந்த 100 பேர் யார்?
ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு : கேரளா காங்கிரஸ் கண்டனம்!