ஐசிசி லெவன் 2024 : 10 அண்டை நாட்டு வீரர்கள்: இந்தியர்களுக்கு கல்தா!

Published On:

| By Kumaresan M

ஐசிசி லெவன் 2024 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அணியில் 10 ஆசிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த 10 பேருமே அண்டை நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். பட்டியலில் ஒரு இந்திய வீரர்கள் இல்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.

இந்த அணிக்கு இலங்கை அணி கேப்டன் சரித் அஸ்லான்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பதும் நிஷாங்கா, குஷால் மெண்டீஸ், வனிந்து ஹசராங்கா ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஷாயீம் ஆயூப், ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரீஸ் ரஃவுப் ஆகிய பாகிஸ்தான் வீரர்களும் பட்டியலில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஹமனுல்லா குர்பாஸ், அஸ்மதுல்லா ஷமர்ஷா, கஷான்ஃபார் ஆகியோருக்கும் ஐ.சி.சி லெவனில் இடம் கிடைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ரூதர்ஃபோர்டு மட்டுமே அணியில் இடம் பெற்ற ஆசியர் அல்லாத வீரர் ஆவார். ஆக, இந்த பட்டியலில் ஒரு இந்தியருக்கு கூட இடம் கிடைக்கவில்லை.

கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியா 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான அந்த தொடரில் முதல் போட்டி ‘டை’ யில் முடிய மற்ற இரு ஆட்டங்களையும் இலங்கை வென்று தொடரை கைப்பற்றியது.

கடந்த ஆண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 14 ஆட்டங்களில் ஆடிய ஆப்கானிஸ்தான் 8 வெற்றிகளை ருசித்தது.

ஐ.சி.சி. அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் கேப்டன் அஸ்லான்கா 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 605 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் 4 அரை சதமும் அடங்கும். சராசரி 50.2

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel