காங்கிரஸ் பொதுமக்களின் செல்வத்தைப் பறித்து ஊடுருவல்காரர்களிடம் கொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி கூறியதற்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நேற்று (ஏப்ரல் 21) நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
இதற்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின்,
“பிரதமர் மோடியின் நச்சு பேச்சு மிகவும் மோசமானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது. அவரது அரசின் தோல்விகளால் மக்கள் கோபத்தில் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து, அதற்குப் பயந்து மத உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்.
தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே வெறுப்புப் பேச்சுக்களைப் பேசியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான கேரண்டி.
பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுவிட்டது.
இந்தியா கூட்டணி உறுதியளித்த சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க ஏற்பட்ட நீண்ட கால தாமதத்திற்கான ஒரு தீர்வாகும். பிரதமர் அதைத் திரித்துக் கூறியுள்ளார்.
சமூக ரீதியாகப் பின்தங்கிய சமூகங்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளில் உரியப் பங்கை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
பாஜகவின் வஞ்சகமான திசை திருப்பும் உத்திகள் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வெற்றிமாறனுடன் இணையும் லாரன்ஸ்… தரமான சம்பவம் லோடிங்…!
பொன்முடி, ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்குகள் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!