தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அறிக்கை கேட்டு அக்கட்சியின் டெல்லி மேலிடம் இன்று (ஜூலை 25) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மார்க்சிஸ்ட் என பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் சமீபகாலமாக தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நமது மின்னம்பலம் தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம். குறிப்பாக ’திமுக கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் ஏற்கனவே தொனி மாறி பேசி வருகிறது’ என்றும், ’2026 தேர்தலுக்குப் பின் நடக்கும் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்’ என்று எம்பி. கார்த்தி சிதம்பரம் சில நாட்களுக்கு முன் பேசியதையும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.
முன்னதாக கடந்த மே மாதம் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், ”தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறான நிலை இல்லை. 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர்வதை காலமும் கட்சி தலைமையும் தான் முடிவு செய்யும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான், திமுகவுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பொதுவெளியில் பேசி வருவது டெல்லி தலைமை வரை சென்றுள்ளது.
இதனையடுத்து தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் மூலம் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களில் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் தலைமை இன்று உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா