அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி அமைவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு செயல்முறைகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து கற்றல் ஏற்பாடுகளும் மாணவர்களுக்கு முழுமையாக சென்று சேர்வதற்காக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத்திறன் ஆகியவை குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வகை அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்களில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவ, மாணவிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு இக்கல்வியாண்டில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
இதுகுறித்த விவரங்களை EMIS தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளச்சாராய மரணம்: ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்!