பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில்ங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) மேற்கொள்வது தொடர்பாக மூன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசித்து முடிவெடுப்பர் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று ஆகஸ்ட் 17-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்கு திருட்டு போன்ற சொற்களைப் பயன்படுத்துவது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல். இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் நடத்தி வருகிறது. வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது.
பீகார் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெறுகிறது. 1.6 லட்சம் பூத் லெவல் ஏஜெண்டுகள் (BLA) வரைவுப் பட்டியலைத் தயாரித்துள்ளனர். ஒவ்வொரு பூத்திலும் இந்த வரைவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் பூத் லெவல் ஏஜெண்டுகளும் தங்கள் கையொப்பங்களுடன் அதைச் சரிபார்த்தனர் என்றார்.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது ஆதார் அட்டை- வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பீகாரில் சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
