போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை!

Published On:

| By Kavi

கொரோனா பரவல் காலத்தில் பணி புரிந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

2020, 2021ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. அப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக அரசு போக்குவரத்து கழகம் மூலம் குறிப்பிட்ட பேருந்துகள் மட்டும் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுடன் இயக்கப்பட்டன.

இந்நிலையில் கொரோனா பரவல் சமயத்தில் பணி புரிந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூன் 28) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி புரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் நாளொன்றுக்கு 1.70 கோடி பயணிகள் பயன் பெறுகின்றனர்.
கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியான பேருந்து சேவைகளுக்காக, பேருந்துகளை இயக்கின. அப்போது, போக்குவரத்துப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திற்கு பின், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, 14 வது ஊதிய ஒப்பந்தத்தை 01-09-2019 முதல் அமல்படுத்தி, ஊதிய உயர்வு அளித்து, அதன்படி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 2022 முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா

பெண்கள் கால்பந்து போட்டி: தமிழ்நாடு சாம்பியன்!

அச்சுறுத்தும் விலைவாசி உயர்வு: பாஜக அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share