தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் இன்று (மார்ச் 22) பங்கேற்கும் தலைவர்களுக்கு சிறப்பு பரிசு பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. special gift box will be given to JAC leaders
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான முதல் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் சிங், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் வருகை தந்துள்ளனர்.
அவர்களுடன் பஞ்சாப், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானாவைச் சார்ந்த 24 கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து தலைவர்களுக்கும் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் பொருட்களுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பரிசு பெட்டகத்தில் வைத்து வழங்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களான பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான உயிரியல் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு இந்தப் பொருட்கள் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.