தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே காய்ச்சலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரியவர்களை விடக் குழந்தைகளுக்குப் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாகக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.
இது குறித்துக் கடந்த செப்டம்பர் 15 செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் 282 குழந்தைகள் இன்புளுயன்ஸா என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 20) காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார்.

“பருவ மழைக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயல்பு தான். தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் இன்புளுயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1166 ஆக உள்ளது. 5 நாட்களுக்கு முன்பு 282 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு தினங்களுக்கு முன்பு 368 பேரும், நேற்றைய தினம் 371 பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன. 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் சிறப்பு முகாம்களில் பணியாற்றுகின்றன.
காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் இந்த முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் 388 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாகவும் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன
நாளை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட பிறகு எந்த பகுதியில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ, அந்த பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும்.
வடகிழக்கு பருவ மழை முடியும் வரை இந்த சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ளன. காய்ச்சல் பாதிப்புடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்பதை மக்கள் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.
மோனிஷா