செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலைவாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட 47 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இவர்கள் மீதான வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கான நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த 2023 செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து செந்தில் பாலாஜியை கைது செய்தது. தற்போது அவர் புழல் சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், “இவ்வழக்கை தொடர அனுமதி கடிதம் இன்னும் தமிழக அரசின் பொதுத்துறையிடம் இருந்து கிடைக்கவில்லை. இந்த அனுமதி கடிதத்தை சமர்ப்பிக்க 3 வார காலம் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ஜெயவேல், “தமிழக அரசு அனுமதி கிடைத்துவிட்டது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வந்தது. எனவே பழைய காரணத்தை கூறி அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது” என்று கூறினார்.
இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று (செப்டம்பர் 18) விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான தமிழக அரசின் அனுமதி உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணையை வரும் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயவேல்.
அன்றைய தினம் செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராகவும் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பெஷாவருக்கு பதிலாக கராச்சிக்கு சென்ற விமானம்… ஐரோப்பிய வான்வெளியில் பாக். ஏர்லைன்ஸ் தடை பின்னணி!
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – கேட்டை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)