வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கான சிறப்பு முகாம்கள் இன்று (டிசம்பர் 20) முதல் தொடங்குகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த புகார்கள், திருத்தங்கள் மற்றும் புதிய பெயர்களைச் சேர்ப்பதற்கான முகாம்கள் சென்னை மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.
நேற்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக்கொள்ளவும், விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் அடுத்த இரு வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்தார்.
அதன்படி நடைபெறும் சிறப்பு முகாமகளில் புதிய வாக்காளர் பதிவு அல்லது பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ஐயும், மரணம் அல்லது இடமாற்றம் போன்ற காரணங்களுக்காகப் பெயரை நீக்கப் படிவம் 7-ஐயும், வாக்காளர் விவரங்களில் திருத்தங்கள் அல்லது முகவரி மாற்றங்களுக்குப் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 14 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டிருந்தால் அவர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்கு சென்று தங்களது படிவங்களை சமர்ப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தேர்தல் ஆணையத்தின் வலைத்தளமான https://voters.eci.gov.in அல்லது வாக்காளர் உதவி ஆப் (Voter Helpline App) மூலமாகவும் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல் மீதான புகார்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 19, 2025 அன்று தொடங்கி சுமார் 30 நாட்கள் நீடிக்கும்.
இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
