வார விடுமுறை : சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்!

Published On:

| By Kavi

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. special buses for weekend leave

வார விடுமுறை நாட்களின் போது சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கமாகிவிட்டது. அதே சமயம் பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய சமயத்தில், தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ஒவ்வொரு வார விடுமுறை நாட்களின் போதும் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது.இந்த நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பிப்ரவரி 21 (வெள்ளிக்கிழமை), 22 (சனிக்கிழமை), 23 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் பிற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும், சனிக்கிழமை 240 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 51 பேருந்துகளும், சனிக்கிழமை 51 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து நாளை 20 பேருந்துகளும், சனி அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எஸ்இடிசி தெரிவித்துள்ளது.

அதேபோல ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமை அன்று 7708 பயணிகளும், சனிக் கிழமை 3132 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7612 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. special buses for weekend leave

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share