சிறப்புக் கட்டுரை:தொலைக்காட்சி ஊடகம்: சுவாரஸ்யமான அரசியலும், சாரமற்ற விவாதங்களும்!

Published On:

| By Balaji

ராஜன் குறை

அரசியல் விவாதம் என்பது எப்போதுமே சுவாரஸ்யமானதாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அது இவ்வளவு பெரிய மக்கள் தொகுதிக்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த அரசு, அதன் செயல்பாடுகள், அந்த அரசை ஆள முன்வரும் அரசியல் கட்சிகள் ஆகியவை அனைத்தையும் உள்ளடக்கியது. மக்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் பல்வேறு பிரச்சினைகளிலும் எத்தகைய முடிவை எடுப்பது, எப்படிச் செயல்படுத்துவது என்பதை விவாதிப்பதைவிட எது அதிக சுவாரஸ்யமாக இருக்க முடியும்?

ஆனால் தமிழ் தொலைக்காட்சி விவாதங்கள் அலுப்பூட்டுகின்றன. அவற்றில் எந்த சுவாரஸ்யமும் இருப்பதில்லை. கேட்ட கேள்வியே கேட்டு, அரைத்த மாவையே அரைக்கிறார்கள். கட்சிகளின் சார்பாக பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்கிறார்கள். அவர்களே அவரவர்கள் கட்சிக்கு ஆதரவாகத்தானே பேச முடியும் என்று சொல்லிவிடுகிறார்கள். அதனால் எந்த ஒரு மாற்றுக்கோணமும், புதிய பார்வைகளும் தோன்றுவதில்லை. விவாதிக்கப்படுவதில்லை. விவாதிக்கப்படும் பிரச்சினையை விட்டுவிட்டு தொடர்பற்றவற்றை விவாதிப்பது, நீங்கள் மட்டும் ஒழுங்கா என்று பேசுவது என பொருளற்றுப் போகின்றன விவாதங்கள். எதனால் இது இப்படியாகிறது? ஏன் அரசியல் குறித்து மக்களின் ஆர்வத்தைத் தூண்டமுடியாமல், ஓ அரசியலா என்று அலுப்படைய வைக்கின்றன விவாதங்கள். கட்சிக்காரர்களே கூட இந்த விவாதங்களைப் பார்ப்பார்களா என்று சில நேரங்களில் வியப்பாக இருக்கிறது. இவ்வாறு விவாதங்கள் பொருளற்றுப் போவதற்கான காரணங்களை யோசித்துப் பார்ப்போம்.

பொதுமக்களின் கோணம் எனப்படும் குடிமை சமூக கோணம் பேசப்படுவதில்லை

உதாரணமாக ஒரு சமீபத்திய விவாதப்பொருளை எடுத்துக்கொள்வோம். அது என்னவென்றால் சசிகலா சிறையிலிருந்து வெளிவந்தவுடன் எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்ற கேள்வி. அதன் பொருள் தினகரனின் அமமுக வலுப்பெறுமா, எடப்பாடி தலைமையில் உள்ளவர்கள் மீண்டும் அவரிடம் சென்று விடுவார்களா என்பது போன்ற கேள்விகள்.

இந்த அம்சம் விவாதிக்கப்படும்போது அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர், அவரை மக்கள் ஏற்பார்களா என்ற கேள்வியை யாருமே விவாதிப்பதில்லை. ஆரோக்கியமான அரசியல் என்பதில் இவ்விதம் ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு இடம் இருக்கிறதா என்ற கேள்வியை முற்றிலும் மறந்துவிட்டு விவாதிப்பது சரியாகுமா? அரசியல் கட்சிகள் எல்லாமே ஓரளவு சொத்துக்குவிப்பில் ஈடுபடுகின்றன என்பதால், நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட குற்றத்துக்கும், நிரூபிக்கப்படாத குற்றத்துக்கும் வேறுபாடே கிடையாதா? சரி, மக்கள் மன்றத்தின் அணுகுமுறையும், நீதிமன்றத்தின் அணுகுமுறையும் வேறானவை என்றே வைத்துக்கொள்வோம். மக்கள் மன்றத்திலும் சசிகலா குடும்பம் என்ற மன்னார்குடி குடும்பம் கட்சியைத் தங்கள் கைப்பிடியில் வைத்திருந்ததை குறித்து விமர்சனம் இருந்ததே? ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக சசிகலாவை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா? இப்போது ஏற்றுக்கொள்வார்களா? சமூக ஊடகங்களில் ஏராளமானவர்கள் கருத்துகளைப் பதிவிடும் இந்தக் காலத்தில் மக்களின் மனப்போக்கு எப்படியிருக்கிறது என்பதை கவனித்து பேசும் அரசியல் நோக்கர்கள் இருக்கிறார்களா? தொலைக்காட்சிகளில் கட்சிகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே பேசும்போது இத்தகைய பல கேள்விகள் அடிப்பட்டுப் போகின்றன.

* சசிகலாவின் எதிர்கால அரசியல் குறித்து அரசியல் வியூகம், காய் நகர்த்தல், தினகரன் டெல்லி பயணம், சுப்பிரமணிய சுவாமியின் கருத்து என்றெல்லாம்தான் பேசப்படுகிறதே தவிர, மக்களின் மனப்போக்குகளை விவாதிப்பதும் இல்லை, அப்படி விவாதிக்கக் கூடிய அரசியல் விமர்சகர்கள் யாரையும் தொலைக்காட்சிகள் உருவாக்குவதும் இல்லை.*அரசியல் குறித்த விவாதம் அரசியல்வாதிகள் கோணத்திலிருந்து நடைபெறுகிறதே தவிர, மக்கள் கோணத்திலிருந்து நடைபெறுவதில்லை.

பாசாங்கு நடுநிலைமையால் ஏற்படும் அசுவாரஸ்யம்

ஒரு குறிப்பிட்ட சூழலில் நிலவும் சாதக பாதகங்களை வெளிப்படையாக ஏற்றால்தான் ஒரு செயலின் விளைவுகளைக் குறித்து சுவாரஸ்யமாக விவாதிக்க முடியும். அதாவது ஒருவர் பந்தயத்தில் பின் தங்கியிருப்பதைக் கவனித்தால்தான் அவர் முன்னால் வருவாரா என்ற கேள்வியில் சுவாரஸ்யம் இருக்கும். அதுபோல தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலில் ஒரு சமமின்மை துல்லியமாக இருக்கிறது. தி.மு.க அணியில் கலைஞரின் அரசியல் வாரிசாகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் உறுதிசெய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

கொள்கையளவில் திராவிட இயக்கத்தின் கடந்த கால வரலாற்றின் தொடர்ச்சியாக அவர் ஒலிக்கிறார். அதன் விளைவாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை தி.மு.க கூட்டணி பெற்றது. அ.இ.அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார் என்பது தெளிவாக முடிவாகவில்லை. கொள்கையளவில் திராவிட அரசியலின் தோற்றுவாயிலிருந்து விலகிப்போய்விட்ட கட்சியாகத்தான் அது இருக்கிறது. தலைமைக்கான போட்டியும், குழப்பங்களும் உள்ளன. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அ.இ.அ.தி.மு.க-வைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டுள்ளது. அந்த பினாமி ஆட்சி முறையைத் தொடர்வதா, அல்லது அ.இ.அ.தி.மு.க-வை முற்றிலும் பலவீனப்படுத்திவிட்டு தானே அதன் இடத்தில் தி.மு.க-வின் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சி செய்வதா என்ற குழப்பத்தில் பாஜக உள்ளது. இந்த குழப்பத்தால் கடந்த நான்கு ஆண்டுகளில் அ.இ.அ.தி.மு.க அரசு மக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து ஈட்டும் விதத்திலேயே பாஜக செயல்பட்டுள்ளது. இந்த சமமற்ற சூழ்நிலையை ஏற்றுக்கொண்டால்தான் வரப்போகும் தேர்தல் குறித்த விவாதம் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் பெரும்பாலான விவாதங்களில் தி.மு.க அணியும், அ.இ.அ.தி.மு.க அணியும் சமபலத்தில் இருப்பதுபோல ஒரு பாசாங்கு சமத்துவம் ஏற்படுத்தப்படுகிறது. கட்சிக்காரர்களே இது குறித்து விவாதிப்பதால் மீண்டும், மீண்டும் நாங்கள்தான் மகத்தான வெற்றி பெறுவோம் என்று கூறுவதைத்தவிர வேறு என்ன கூறமுடியும்?

இந்தச் சூழ்நிலையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூற்றுகளை மையப்படுத்தி விவாதிக்கும் போக்கு ஒன்றும் தொடர்கிறது. தேர்தல் நெருங்கும்போது நிச்சயம் தொகுதி பங்கீட்டுக்கான பேரம் நடக்கத்தான் செய்யும். அப்போது எல்லா சிறிய கட்சிகளும் முரண்பட்டு பேசத்தான் செய்யும். அதை வைத்தே அடுத்த ஆறு மாதங்களும் விவாதங்களை நடத்தலாம் என தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் நினைப்பது பரிதாபகரமானது. இன்றைக்கு விவாதம் பா.ம.க தலைவர் என்ன சொன்னார் என்பதை வைத்து நடந்தால், நாளைய விவாதம் காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்ன சொன்னார் என்று நடக்கும். கூட்டணிகள் உடையுமா, உடையாதா என்று தொடங்கினால் எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது என்றுதான் எல்லோரும் பேசுவார்கள்.

*திரைமறைவு பேரங்களை ஊகிப்பதும், அந்த ஊகங்கள் அடிப்படையில் தனக்கும் அரசியல் தெரியும் என்ற மனமயக்கம் கொள்வதுமாகவே மக்கள் மனப்போக்கை ஊடகங்கள் கட்டமைக்கின்றன.* ஆனால், இது உண்மையில் பொதுவான பார்வையாளர்கள் பலரை அரசியல் விவாதங்களிலிருந்து விலகிச்செல்லவே தூண்டுகிறது. அரசியல்வாதிகளை மடக்கி, மடக்கி கேள்விகேட்பதில் நெறியாளர்களுக்கு சுவாரஸ்யம் இருக்கலாம். மக்களுக்கு அதைக்கேட்பதில் சுவாரஸ்யம் இல்லை. நான் விசாரித்தவரை இந்த விவாதங்களைப் பார்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. நான் சொன்னால் கேட்டுக்கொள்கிறார்களே தவிர, அவர்களே பார்க்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை

மக்களின் வாழ்க்கை பிரச்சினைகள் சிறு, குறு தொழில்கள், வர்த்தகம், விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் எனப் பல்வேறு அம்சங்களை சார்ந்துள்ளது. அவற்றில் ஏற்படும் தாக்கங்கள், மாற்றங்கள் ஆகியவற்றுக்கும் அவர்கள் தேர்தலில் எப்படி வாக்களிப்பார்கள் என்பதற்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி விவாதங்கள் இந்தத் தொடர்புகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு குறிப்பிட்ட தொழில் கடந்த ஐந்தாண்டுகளில் சந்தித்த பிரச்சினைகள் என்ன, அவர்கள் மத்திய மாநில அரசுகளைக் குறித்து எவ்விதமான உணர்வில் இருக்கிறார்கள் என்பதை குறித்தெல்லாம் யாரும் விவாதிப்பதில்லை. அதற்குப்பதில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா, மாட்டாரா என்பதையே முக்கியமான பிரச்சினையாக ஊடகங்கள் நினைக்கின்றன. ஒவ்வொரு நாளும் அரசு பல்வேறு முடிவுகளை எடுக்கிறது; அதன் விளைவுகள் சமூகத்தில் பலவிதங்களில் தாக்கம் செலுத்துகின்றன. அவையெல்லாம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள், அதற்கும் தேர்தல் வெற்றி தோல்விக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்றெல்லாம் விவாதிக்கப்படுவதில்லை.

சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் என்பது மக்கள் ஓட்டளித்து கட்சிகள் வெற்றி பெறுவது என்பதற்குப் பதிலாக அரசியல்வாதிகள் எப்படியோ யுக்திகள் செய்து, சூதும் வாதும் செய்து தேர்தலில் வெல்வார்கள் என்பதே தொலைக்காட்சி ஊடகத்தின் பார்வையாக இருக்கிறது. அந்த அரசியல் பேரங்கள், திரைமறைவு நடவடிக்கைகள், யுக்திகள் ஆகியவற்றை குறித்து யூகிப்பதும், ஓயாமல் அவற்றைக் குறித்து வம்பு பேசுவதும்தான் அரசியலின் சுவாரஸ்யம் என்று நினைக்கிறார்கள்.

இதனால் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை, ஆசிரியர் பிரதிநிதிகளை அழைத்து நீட் தேர்வு பிரச்சினையால் தேர்தலில் என்ன தாக்கம் இருக்கும் என்று பேசமாட்டார்கள். தொழிலாளர்களை, தொழில்முனைவோரை அழைத்து சமீபத்திய பொருளாதார சரிவின் தாக்கம் தேர்தலில் எப்படி இருக்கும் என்று விவாதிக்க மாட்டார்கள். விவசாயிகளின் பிரதிநிதிகளை கூப்பிட்டு புதிய வேளாண் மசோதாக்களின் தாக்கம் தேர்தலில் எப்படி இருக்கும் என்று விவாதிக்க மாட்டார்கள். குடிமையுரிமை சட்ட சீர்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தின் தாக்கம் எப்படியிருக்குமென சட்ட வல்லுநர்களிடம் விவாதிக்க மாட்டார்கள்.

ஆனால், சசிகலா விடுதலை, அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து முப்பது முதல், நாற்பது விவாதங்கள் நடக்கும். ரஜினி அரசியல் கட்சி தொடங்காவிட்டால் அதைக்குறித்து ஐம்பது விவாதங்களும், தொடங்கிவிட்டால் அதைக்குறித்து முந்நூறு விவாதங்களும் நடக்கும். கூட்டணி முரண்கள், பிளவா பிளவில்லையா என்று ஒரு முந்நூறு விவாதங்கள் நடக்கும்.

தேர்தல் என்பது அரசியல் கட்சிகள் ஆடும் ஆட்டம். அதில் யார் வெல்வார்கள், தோற்பார்கள் என்பதுதான் பிரச்சினையே தவிர, மக்கள் வாழ்வுக்கும், அந்த வாழ்வின் பிரச்சினைகளுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதே தொலைக்காட்சி ஊடகங்களின் நிலைபாடு. அதனால் அரசியல் விவாதம் என்பதே அரசியல் கட்சிகளின் லாவணிதான் என்ற நிலையே நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றி மக்களின் எண்ணங்களை, பிரச்சினைகளை, கவலைகளை, கோணங்களைப் பேசுகின்ற விவாதங்கள் தோன்றுமா, அத்தகைய விவாதங்களை மேற்கொள்ளக் கூடிய அரசியல் சிந்தனையை, சிந்தனையாளர்களை தொலைக்காட்சி ஊடகங்கள் உருவாக்குமா என்பது ஐயமே. இப்பாதைக்கு தொலைக்காட்சி ஊடக விவாதங்களால் நிகழ்வது அரசியல் நீக்கமே தவிர, அரசியல் விழிப்புணர்வு அல்ல.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share