சிறப்புக் கட்டுரை : அழியும் நிலையில் தமிழ்நாட்டின் மாநில விலங்கு!

Published On:

| By Balaji

– வி.களத்தூர் பாரூக்

‘மேகம்போல் அலையும் ஆடுகள்’ என்று ஆய்வாளர் ஜார்ஜ் ஷேலர் ‘ஸ்டோன்ஸ் ஆப் சைலன்ஸ்’ என்ற தனது புத்தகத்தில் வரையாடுகளைப் பற்றி குறிப்பிட்டிருப்பார். மேகத்தோடு இணைந்து செல்வதுபோல் வரையாடுகள் அவ்வளவு உயரத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு. இது பரவலாக யாருக்கும் தெரியாது. தேசிய விலங்கு எதுவென்றால் உடனே புலி என்று சொல்லிவிடுவோம். தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது என்று கேட்டால் பலரும் தெரியாது என்றே பதிலுரைக்கின்றனர்.

வரையாடு

வரை என்பது குவடு, குன்று, மலை, மலையுச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆடு என்பது அதன் இனத்தைக் குறிக்கிறது. இதை ஆங்கிலத்தில் நீலகிரி டார் (Nilgiri Tahr) என்று அழைக்கிறார்கள். பழங்காலம் தொட்டே வரையாடுகள் தமிழர்களோடு இணைந்து இருக்கின்றன. மரையா, வருடை என்ற பெயர்களிலும் சங்க இலக்கியங்களில் அழைக்கப்பட்டிருக்கின்றன.

ADVERTISEMENT

‘ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துரு பெருந்தேன்’என்று சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பல இலக்கியங்களில் வரையாடுகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. வரையாடுகள் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டுமே காணப்படும் அபூர்வ விலங்கு வரையாடாகும்.

கடல் மட்டத்திலிருந்து 1200-2600 மீ உயர்ந்த மலை முகடுகளில் உள்ள புல்வெளிகளில்தான் அவை வாழும். தனித்து வாழாமல் கூட்டுக்குடும்பமாக வாழும் தன்மையை அது பெற்றிருக்கிறது. அதன் கூட்டத்தில் 6 முதல் 150 உறுப்பினர்கள் வரை கொண்ட குழுவாக அது வாழும். காட்டாடு இனத்திலேயே மிகவும் பெரிய உடலமைப்பைக் கொண்டது வரையாடு. மிகவும் கூரிய பார்வையைக் கொண்டிருப்பதால் எதிரிகளைத் தொலைவிலேயே அறிந்து கொள்ளும்.

ADVERTISEMENT

இது விசிலடிப்பது போல் குரல் எழுப்பும். மற்ற ஆடுகளைப்போல் கத்தாது. அதேநேரம் இதற்கு இரவு நேரங்களில் கண்கள் தெரியாது. அதனால் இரவு நேரங்களில் தங்களது இருப்பிடங்களைவிட்டு எங்கும் செல்லாது. தண்ணீர் குடிக்கும் பழக்கமும் வரையாடுகளுக்கு கிடையாது. தாகமெடுத்தால் புற்களின் மீதுள்ள பனித்துளிகளை அருந்திக்கொள்ளும். அதிகமான மழைப்பொழிவு, செழிப்பான பிரதேசங்களில் மட்டுமே இது வாழும்.

மேற்கு தொடர்ச்சி மலைகளிலேயே கேரளத்தின் இரவிக்குளம் தேசியப் பூங்காவில்தான் வரையாடுகள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. அதற்கடுத்து தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் புல்மலை தேசியப் பூங்காவில் அதிகம் வாழ்கின்றன. வரையாடுகள் மொத்தம் 2000 முதல் 2600 வரை இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் வரையாடுகள் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு அருகி வருவது பலருக்கும் வருத்தத்தைத் தருகிறது. 1969 ஆண்டுகளிலேயே வரையாடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட ஜார்ஜ் ஷேலர் அது அழிந்து வருவது குறித்து எச்சரித்திருக்கிறார். ‘இந்த நீலகிரி வரையாடுகள் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாக இருப்பதாலும், இவற்றின் பரவல் மிகக் குறுகிய இடத்தில் இருப்பதாலும் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களைப் பற்றிய IUCN வெளியிடும் சிவப்பு புத்தகத்தில் இடம்பெறத் தகுதி பெற்றுவிட்டன’ என்று தனது ‘அப்சர்வேசன்ஸ் ஆன் தி நீலகிரி தார்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

1969 லேயே அந்த நிலை என்றால் தற்போதைய நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. வரையாடுகள் அழிந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சிறுத்தை, புலி, செந்நாய் ஆகியவற்றிற்கு இரையாவது. இது இயற்கையானது என்பதால் இதனைத் தடுக்க முடியாது. ஆனால் செயற்கையான காரணங்களே அதை அதிகம் பாதிக்கப்படைய செய்கின்றன. வனங்களில் ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட சீகை, பைன், தைல மரம் போன்ற மரங்கள் இயற்கையான புல்வெளிகளை மூடிவிடுகிறது. இதனால் உணவு கிடைக்காமல் மடிகிறது.

அடுத்து காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர்கள் சாகுபடி செய்வது ஒரு முக்கியமான காரணமாகும். மனிதர்களால் உருவாகும் காட்டுத்தீ, கால்நடை மேய்த்தல், மின் உற்பத்திக்கான அணை கட்டுதல், காடுகளில் சாலை அமைத்தல், கள்ள வேட்டையாடுதல், காடழிப்பு போன்றவையே வரையாடுகளின் அழிவிற்கு பெரும் காரணமாக இருக்கின்றது.

பிளவுபட்ட குறைந்த உயிர்தொகையில் ஏற்படும் உள்ளின பெருக்கமும் வரையாடுகள் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தலாக இருக்கின்றது. வரையாடுகளைக் காப்பதற்கான வழிமுறைகளை உடனே கண்டறியவேண்டும். வரையாடுகளைக் காப்பதில் கேரள அரசு சிறப்பாகச் செயல்படுவதாகப் பலர் கூறுகின்றனர். அதுபோலவே தமிழக அரசும் செயலாற்ற வேண்டும். வரையாட்டின் வாழ்விடத்தை அழிக்காமல் அதைக் காப்பதற்கான பணிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு வெறும் புகைப்படத்தில் மட்டுமே காட்சியளிக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு

– வி.களத்தூர் பாரூக்

(வாழ்வியல் மார்க்கம், துல்லிய தாக்குதல் ஆகிய நூல்களின் ஆசிரியர்)

(thasfarook@gmail.com)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share