பாஸ்கர் செல்வராஜ்
உலகின் மற்ற பகுதிகளில் நிகழ்ந்தது போலவே நாகரிகங்களின் தோற்றம், விவசாய வளர்ச்சி, கைத்தொழில்களின் பெருக்கம், வணிகம், செல்வ வளர்ச்சி அதன் அடையாளமாகப் பேரரசுகளின் உருவாக்கம் என அனைத்தும் இந்தியாவிலும் நடக்கிறது. ஆனால், அதன் பிறகு மற்ற நாடுகளில் எல்லாம் கைத்தொழில்கள் மேலும் வளர்ந்து தொழிற்சாலைகளாக, தொழில்மயமான நாடுகளாக மாற்றம் காணுகின்றன. இந்தியாவிலோ அம்மி, குடைக்கல், அடுக்குப் பானை, கட்டைவண்டி மாடு என தேங்கி நின்று விடுகிறது. இந்த தேக்கம் எப்போது ஏற்பட்டது என்று அறுதியிட்டு கூற முடியாது. ஆனால், வடக்கே பௌத்தம் தழைத்தோங்கிய மௌரியர்களின் ஆட்சிக்குப் பின்னான (கிமு 2ஆம் நூற்றாண்டு) சுமார் 4௦௦ வருட காலத்திய புராண இதிகாசங்களின் வளர்ச்சியும், அதனைத்தொடர்ந்த சாதிய கட்டமைப்பை நிறுவனப்படுத்திய குப்தப் பேரரசும் உருவாகிறது (கிமு 3 – 5ஆம் நூற்றாண்டு). சமீபத்தில் இந்திய மக்களின் ஜீன்கள் குறித்த ஓர் ஆய்வு, மக்களினங்கள் கலப்பது 1,5௦௦ ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் நின்று போனது என்ற தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில்தான் படிப்படியாக பல நூற்றாண்டுகளாக, மக்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் அவர்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த மக்களும், தொழிலும் மேற்கொண்டு பரவிக் கலக்காமல் தடுக்கப்பட்டதை உறுதி செய்கிறது.

அதேபோல தெற்கில் பௌத்தத்தைப் பின்பற்றி பல நீதி நூல்கள் உருவாக வித்திட்ட களப்பிரர்களின் ஆட்சியைத்தொடர்ந்த பக்தி இலக்கியங்களின் வளர்ச்சி, அதைத் தொடர்ந்த சாதிய கட்டமைப்பை நிறுவனப்படுத்திய சோழர்களின் பேரரசு எழுகிறது. இந்த இரு பேரரசுகளின் வீழ்ச்சிக்குப்பின் வடக்கிலும் சரி தெற்கிலும் சரி அரசுகள் மட்டுமல்ல; மக்களும் சிறுசிறு துண்டுகளாக சிதறுண்டு போகிறார்கள். இதன் பிறகு இந்திய சமூகமும், பொருள் உற்பத்தியும் எந்த பெரிய மாற்றமும் காணாமல் நின்று விடுகிறது. மற்ற நாடுகள் எல்லாம் தொடர்ந்து வளர்ந்து, தொழில்மயமாகி ஜனநாயக சமூகமாக மாற்றம் காணும்போது, இந்தியாவின் வளர்ச்சி மௌனமாகி நின்றதற்கும், மக்கள் சாதிகளாகவும், தொழில்கள் குறிப்பிட்ட சாதிக்கு உரியதாக சுருக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நாம் சொல்ல முடியுமா?
உதாரணமாக ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் யூதர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கி இருந்திருந்தால் இன்று அந்த அறிவியல் ஆலமரமாக வளர்ந்திருக்குமா? ஐன்ஸ்டீன் வழிவந்த யூதர்களின் கண்டுபிடிப்புகள் உயர்வானது என்றும், நியூட்டன் வழிவந்த ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்புகள் தாழ்வானது என்றும் தரம் பிரிக்கும் போது, மனித சமூகம் அவற்றை இரு வேறு அறிவியலாகப் பார்த்திருக்குமா… அல்லது ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என முன்முடிவு செய்யப்பட்ட இனவாத பார்வையில் அணுகி இருக்குமா?
ஆக ஒரு குலத்திற்கு ஒரு வகையான கல்வி எனச் சுருக்குவதும், தொழிலில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதும் நிச்சயம் நம்மை இருக்கும் நிலையில் பிடித்து வைக்குமே தவிர மேற்கொண்டு முன்னேற்றாது என்பதே வரலாறு தரும் பாடம். சரி கல்வியை எல்லாருக்கும் பரவலாக்கினால் இவை எல்லாம் மாறி விடுமா?
கல்வி பரவலாக்கம் மட்டும் போதாது, தேவை சிந்தனை மாற்றம்
வெறும் கல்விப் பரவலாக்கம் மட்டுமே மாணவர்களைப் புதுமைகள் படைக்கவும், திறனை மேம்படுத்திக்கொள்ளவும் உதவாது என்பதை உணர்ந்ததாலேயே, எதையும் கேள்விக்குட்படுத்தி பகுத்தறிந்து பார்க்கும் சிந்தனையையும் வளர்க்க வேண்டும் என்று வரைவில் குறிப்பிடுகிறார்கள். அப்படியென்றால் ஏற்கனவே இருக்கும் இந்தத் தொழில் உயர்வானது, இன்ன தொழில் இழிவானது என்ற முன்முடிவு செய்யப்பட்ட சிந்தனையில் இருந்து விடுபட்டு எதையும் திறந்த மனதுடன் ஏன், எதற்கு, எப்படி என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் அணுக மாணவர்கள் பயிற்றுவிக்கப்படவேண்டும். கேட்க இனிமையாக இருந்தாலும் இந்திய சமூகத்தில் இது உண்மையில் சாத்தியமா?
கீழடியில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பானை செய்து பயன்படுத்தி இருக்கிறது தமிழினம் என அதன் அறிவியல் முன்னேற்றத்தைச் சொல்லி பெருமை கொள்ளும் அதேவேளை அதே பானையை இன்று செய்யும் குயவரை எப்படிப் பார்க்கச் சொல்லிக் கொடுக்கிறது, அதை எப்படிச் செய்தார்கள், இன்று எப்படிச் செய்கிறார்கள் என்ற அறிந்துகொள்ளும் ஆர்வத்தை எத்தனை பேரிடம் தூண்டியது? ஆக, அறிவுபூர்வமான சிந்தனை வளர்வதற்கான முதல்படி எதையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று பார்க்கும் சிந்தனையைக் கேள்விக்குட்படுத்துவது. அதனிடத்தில் எதையும் சரி தவறுகளின் அடிப்படையிலான மதிப்பீடுகளை வளர்ப்பது.
மக்களின் மத்தியதரக் (Middleclass) கனவு மெய்ப்பட
இப்படி சரி தவறுகளின் அடிப்படையிலான மதிப்பீடுகளுடன் வளரும் மாணவர்கள் ஒவ்வொரு தொழிலின் மீதுள்ள சமூக மதிப்பீட்டை புறம்தள்ளி அதன் பின்னுள்ள நுட்பங்களை அறிந்துகொள்ள முற்படுவார்கள். அந்தப் புரிதலின் ஊடாக அதை மேம்படுத்தும் அறிவையும், அவற்றை உற்பத்தி செய்யும் திறனையும் பெறுவார்கள். சீனாவைப் போன்று முதலில் அறிதலில் (Know How) தொடங்கும் இந்தப் பயணம் படிப்படியாக அவற்றை மேம்படுத்தவும், பின்பு புதிய நுட்பங்களை உருவாக்கவும், அவற்றை உற்பத்தி செய்யவுமான திசையில் நகரும். இது செல்லும் வேகத்தையும் அளவையும் பொறுத்து, கிராமப்புறங்கள் மெல்ல நகரமயமாகும், தொழிலாளர்களின் வருவாய் உயர்ந்து வாழ்க்கைத் தரம் உயரும். அவர்களின் மேம்பட்ட திறனுள்ளவர்கள் அதிக வருவாய் ஈட்டி மத்தியதர வர்க்கத்தினராக மாற்றம் காணுவார்கள்.
2008 வாக்கில் காதைப் பிளக்கும் சத்தத்துடன் வந்த சீன அலைபேசிகள் பெரும்பாலோருக்கு நினைவிருக்கும். சைனா செட் என்று பலரும் அப்போது எள்ளி நகையாடினர். படிப்படியாக அவை வளர்ந்து இன்று இந்தியர்களின் விருப்பத்திற்குரிய ரெட்மீ போன்ற திறன்பேசிகளாக (Smartphone) மாறியிருப்பதையும், சீனாவில் 1980இல் 19 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசித்தது 2017இல் 58 சதவிகிதமாக வளர்ந்திருப்பதையும், சீன நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் நடுத்தர வர்க்கப் பிரிவை சேர்ந்தவர்கள் 2000இல் வெறும் 4 சதவிகிதமாக இருந்து 2018இல் 30 சதவிகிதத்தைத் தாண்டி உயர்ந்திருப்பதையும் இணைத்துப் பார்த்தால் இதில் உள்ள உண்மையும் முக்கியத்துவமும் புரியும்.

தொழில்மயமாவதை நோக்கித் தமிழகம்
இந்த உயர்வு தாழ்வின் அடிப்படையிலான மதிப்பீடுகளைக் கேள்விக்குட்படுத்திய தமிழகத்தின் நகர்புற மக்கள்தொகை 1980இல் 33 சதவிகிதமாக இருந்து 2011இல் 48.5 சதவிகிதமாக உயர்ந்து நாட்டிலேயே அதிக நகரமயமான மாநிலமாக உயர்ந்திருப்பதும்,குறைந்த கூலி தரும் விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 சதவிகிதமாக குறைந்திருப்பதும் தமிழகம் தொழில்மயமாவதை நோக்கிசென்று கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இந்த உயர்வுதாழ்வு மதிப்பீட்டை கேள்விக்குப்படுத்தாத மற்ற மாநிலங்கள் எல்லாம் வளராமல் நின்று விடவில்லையே. மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல, உலகின் எந்த சமூகமும் வளராமல் நின்று விடுவதில்லை. ஆனால் அவர்கள் வளரும் வேகமும், வளரும் விதமும், வளரும் அளவுமே வேறுபடுகின்றன. உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலம் தமிழகத்தைவிட பொருளாதாரத்தில் அதிகமாகவே வளர்ந்திருக்கிறது. ஆனால், உயர்கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, மருத்துவம், ஆகிய அம்சங்களில் தமிழகம் எப்படி மற்ற மாநிலங்களைவிட வேறுபட்டதாகவும், இந்த வளர்ச்சி எப்படி சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதை பலரும் நிறுவி இருக்கின்றனர். இதனோடு, ஒரு சமூகம் முழுமையான தொழில்மயமாகவும், மக்களின் வாழ்க்கை மேம்படவும் தேவையான முக்கியமான கூறுகளில் ஒன்று அறிவும், திறனும்கொண்டவர்கள் புத்தாக்கங்களை நிகழ்த்தி அதைப் பொருளாக சந்தையில் விற்பதற்கான வாய்ப்பும், அந்த உற்பத்தியில் பெருமளவு மக்கள் பங்குபற்றி பலனடைவதை உறுதி செய்வதும்.
மாநிலங்களின் தொழில்துறை வளர்ச்சி ஒப்பீடு

அதிக பொருளாதார வளர்ச்சியை மகாராஷ்டிரம் கொண்டிருந்தாலும், அங்குதான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக இருக்கிறது. அதேநேரம் உற்பத்தி மதிப்பில் தமிழகம், மற்ற மாநிலங்களைவிட குறைவான அளவே உற்பத்தி செய்திருந்தாலும் மற்ற மாநிலங்களை விட அதிகமான தொழில்முனைவோரையும், மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது என்பதிலிருந்து அதன் தொழில்மயத்துக்கும் மற்ற மாநிலத்துக்குமான வேறுபாட்டை உணரலாம்.
அதேபோல சாதிப் படிநிலையில் மேலுள்ளவர்களுக்கே மகாராஷ்டிரா தொழில்முனையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தமிழகம் மற்றவர்களுக்கும் தொழில்முனையும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, தொல்குடியினரின் பங்கு இதில் குறைவாக இருப்பதிலிருந்து, இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழகம் ஏற்றத்தாழ்வான சாதிய சிந்தனையில் ஒரு சிறு உடைப்பை மட்டுமே ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் அதை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவையையும் சுட்டிக்காட்டுகிறது.

இருப்பும் விருப்பும்
தமிழகத்தின் இந்தப் பாதை பொருளாதாரம், சமூகம், மனிதவள மேம்பாடு, வேலைவாய்ப்பு எனப் பல வகையில் மாற்றம் கண்டு மத்திய அரசுக்கு மிக அதிக வரி வருவாயை ஏற்படுத்திக்கொடுத்தாலும், அதன் அடிப்படை சித்தாந்தமான சாதிய படிநிலையைக் கேள்விக்குட்படுத்தி, அதன் ஆதிக்க மேலாண்மையை ஏற்க மறுக்கிறது. அவர்களுக்கான வாக்கு வங்கியை இல்லாமல் ஆக்குகிறது. அது அவர்களுக்கு உவப்பானதாக இல்லை. அதனாலேயே இந்த மாற்றங்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக அதன் அரசியல், கல்வி, வேலைவாய்ப்புகளில் தலையிட்டுக் கட்டுப்படுத்தி மேற்கொண்டு செல்லவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதன் காரணமாகவே புதிய கல்விக் கொள்கை, இந்தியப் பண்பாட்டை போற்றி, நெஞ்சில் ஏந்தி புத்தாக்கங்கள் படைக்க கோருகிறது. அதாவது அறிவியலில் மட்டும் பகுத்தறிந்து, புத்திக் கூர்மையுடன் புத்தாக்கங்கள் செய்து புதுமைகள் படைக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையில் சமூகத்தில் அவ்வாறு செய்வது இந்தியப் பண்பாட்டுக்கு எதிரானது என்கிறார்கள். உலகில் எங்கும் இல்லாத வகையில் அறிவில் limited service வேண்டும் என்கிறார்கள்.
இது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆதலால் பழைய முறையான ஒரு குலத்திற்கு ஒரு கல்வி முறையாக அது முடிகிறது. அது புத்தாக்கங்கள் குறைவாக நிகழ்த்தக் கூடியதாகவும், திறன் குறைந்த தொழிலாளர்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. இந்தியப் பெருநிறுவனங்களுக்கு அலைபேசி, கார் போன்ற நவீன பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான திறன் மிகுந்த தொழிலாளர்கள் தேவைப்படும் அதேவேளை தமக்கு போட்டியாளர்களை உருவாக்காத, தமக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்கும், தனக்கு சாதகமான இந்த அமைப்பும், அரசும் வேண்டும். அதனாலேயே டாட்டா நிறுவனர் முதல் HCL நிறுவனர் சிவநாடார் வரை RSS தலைமையகத்தை நோக்கி அணிவகுக்கிறார்கள். மக்களுக்கு வீடு, கார் என வசதியான மத்தியதர வாழ்க்கையும் வேண்டும். அதேநேரம் இயல்பாக எந்த பெருமுயற்சியும் இன்றி சமூகத்தில் கிடைக்கும் சாதிய மேன்மையையும், பெருமையும் வேண்டும்.
ஒரே நேரத்தில் இரண்டும் வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் இதில் ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். எது வேண்டும் என்பதை நிறுவனங்களும் அரசும் மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்
[முந்தைய பகுதி](https://minnambalam.com/politics/2020/08/27/5/new-education-policy-how-impact-in-india-tamilnadu)
