சிறப்புக் கட்டுரை: மொழிக் கல்வி: புதிய தேசியக் கொள்கை விட்ட இடமும் தொட்ட இடமும்!

Published On:

| By Balaji

மு. இராமனாதன்

பிள்ளைகளுக்கு எழுத்தறிவையும் எண்ணறிவையும் போதிப்பதையே தனது அடிப்படைக் கோட்பாடாக அறிவிக்கிறது புதிய தேசியக் கல்விக் கொள்கை-2020 (பக்கம் 3). எண்ணையும் எழுத்தையும் இரு கண்களாகக் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்திற்கு இதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. அறிவியலையோ, கலைகளையோ கற்க உதவுகிற ஊடகம்தான் மொழி, அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவமில்லை என்று சிலர் சொல்வதுண்டு. இருக்கலாம். ஆனால் எந்தத் துறையானாலும் மொழியறிவு என்பது கற்கவும், பகிரவும், உரையாடவும் முக்கியமான கண்ணியாக விளங்குகிறது. புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியின் அவசியத்தைப் பேசுகிறது. இதை தமிழகத்தின் தற்போதைய நிலையில் பொருத்திப் பார்க்கலாம். மேலும் சர்வதேச மொழியியல் அறிஞர்கள் சொல்லுகிற கற்பித்தல் முறையை அறிக்கை உள்ளடக்கி இருக்கிறதா என்றும் பார்க்கலாம்.

தொட்ட இடம்- தாய்மொழிக் கல்வி

1968ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் இரு மொழித் திட்டம் நடப்பில் இருக்கிறது. இதனுடைய நோக்கம் முதலாவதாகத் தமிழ் அல்லது அவரவருடைய தாய் மொழி, இரண்டாவதாக ஆங்கிலம் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் காலப் போக்கில், குறிப்பாக எண்பதுகளுக்குப் பின்னால், இது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாகி முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டது. இரண்டாவதாகத் தமிழ், அல்லது அவரவர் தாய்மொழி என்பதாகவேனும் இருந்திருக்க வேண்டும். ஆனால் இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது,சம்ஸ்கிருதம், பிரெஞ்சு,ஜெர்மன் என்று பல மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை அவரவர் விருப்பத்துக்கேற்ப இரண்டாவது மொழியாகப் படித்துக்கொள்ளலாம் என்பதாக நடைமுறையில் மாறிவிட்டது.

குறிப்பாக நகரவாசிகள், நடுத்தரவர்க்க, மேல் நடுத்தரவர்க்கத்தினரில் கணிசமானோர் தமிழைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். ஏன்? இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன. ஒன்று, தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் வாங்க முடியாது. மற்ற மொழிகளை எடுத்துப் படித்தால் மதிப்பெண்ணை அள்ளலாம். இன்னொரு காரணம், மற்ற மொழிகளை விரைவாகப் படித்து விடலாம்; நிறைய உபரி நேரம் கிடைக்கும். இந்த உபரி நேரத்தில் மேலதிகமாகக் கணிதமும், உயிரியலும், இயற்பியலும் படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ, கணக்காளராகவோ ஆகிவிடலாம்.

அதாவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிள்ளைகளேகூட, ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகவும், தமிழுக்கு மாற்றாக வேறு ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து இரண்டாவது மொழியாகவும் படிக்கலாம்; 2006 வரைக்கும் தமிழ் கூறும் நல்லுலகில் அப்படியான சாத்தியம் இருந்தது. இதனால் தமிழை ஒரு பாடமாகக்கூடப் படிக்காத ஒரு பிரிவு தமிழகத்தில் உருவாகியது. பள்ளிகளின் தும்பு கல்வி வணிகர்களிடமும் பேராசைக்காரப் பெற்றோர்களிடமும் சிக்கிக்கொண்டதன் விளைவு இது. இந்த நிலைமை 2006க்குப் பின்னால் ஓரளவுக்கு மாறியது.

2006 முதல் மாநிலக் கல்விமுறை செயல்படுத்தப்படும் பள்ளிகளில் படிப்படியாகத் தமிழ்க் கல்வியைக் கட்டாயமாக அமலாக்கியது தமிழக அரசு. இதன் பலனாக, அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2016 முதல் தமிழகமெங்கும் மாநிலக் கல்வி முறையில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய பிள்ளைகளில் பலர் தமிழில் ஒரு தேர்வேனும் எழுதினார்கள். இப்போதும் பத்தாம் வகுப்புக்குப் பிறகு தமிழ் கட்டாயம் இல்லை. ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் அப்போதும் இப்போதும் தமிழ் கட்டாயமில்லை.

இந்தப் பிரச்சினையைப் புதிய கல்விக் கொள்கை எப்படி அணுகுகிறது? தாய்மொழியில்தான் பிள்ளைகள் எளிதாகக் கற்றுக் கொள்வார்கள் என்கிற மொழியியலாளர்களின் கருத்தை அறிக்கை வழிமொழிகிறது. இயன்றவரை, ஐந்தாம் வகுப்பு வரையிலும், முடியுமானால் எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் (பத்தி 4.11, பக்கம் 13 ) என்கிறது அறிக்கை. இது நல்ல கூறுதான், ஆனால் இதில் ஒரு கட்டாயத் தொனி இல்லை. நாளதுவரை தமிழை ஒரு கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்காத தனியார் துறை சி.பி.எஸ்.இ பள்ளிகள், இந்த விதியிலிருந்து விலகிப்போய்விட இடைவழிகளைத் தேடக்கூடும். எந்தப் பள்ளியானாலும் தமிழ் (அல்லது அவரவர் தாய்மொழி) ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்பதை ஒன்றிய அரசும் மாநில அரசும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விட்ட இடம் – மொழியில் திறன்கள் நான்கு

அடுத்து, மொழித்திறன் என்பதைப் புதிய கொள்கை எப்படி வரையறுக்கிறது? எழுத்தறிவு என்பதைப் படிக்கவும் எழுதவுமான திறன் என்கிறது அறிக்கை (பத்தி 2.1, பக்கம் 8). நமது கல்வித்திட்டங்கள் மாணவர்களின் எழுத்தறிவைத்தான் சோதிக்கிறது. ஆனால் மொழியியல் அறிஞர்கள் அப்படிக் கருதவில்லை. இந்த இடத்தில் எனது ஹாங்காங் அனுபவமொன்றைப் பகிர்ந்து கொள்வது பலன் தரலாம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் தமிழ் வகுப்புகளைத் தொடங்கினோம். அப்போது அதன் அமைப்பாளர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், ஹாங்காங் பிள்ளைகளுக்கு அதில் ஓர் ஒவ்வாமை இருந்தது விரைவிலேயே புலப்பட்டது. அதை நுணுகி ஆராய்ந்தோம். அப்போது ஹாங்காங்கில் மொழிக் கல்வி நமது முறைகளிலிருந்து வேறுபட்டது என்பது தெரிந்தது. மேலை நாடுகளிலும் ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற வளர்ச்சியடைந்த கீழை நாடுகளிலும் மொழிக் கல்வியானது நான்கு அலகுகளைக் கொண்டிருக்கிறது. அவை: கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியன. இவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கேட்டல் :

மொழிக் கல்வியில் கேட்டல் முக்கியமானது. பேசுவதுதான் செயல்பூர்வமானது என்றும், கேட்பதற்குக் கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தால் போதுமானதென்றும் சிலர் கருதுகின்றனர். உண்மைதான். ஆனால் செவிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். கவனத்தை ஒருமுகப் படுத்த வேண்டும். வாசிக்கும்போது தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் படிக்கலாம். ஆனால் கேட்கும்போது வார்த்தைகளைத் தவறவிட்டால் பரிமாற்றம் தடைப்படும்.

பேசுதல்:

நன்றாக எழுதக் கூடிய பலரால் சரளமாகப் பேச முடிவதில்லை. சரளமாகப் பேசுகின்ற பலர் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதில்லை. சிலர் பேசுவது சரியாகக் கேட்பதில்லை. நன்றாகக் கேட்குமாறு பேசும் சிலரது உச்சரிப்பு சீராக இருப்பதில்லை. எல்லாவற்றையும் இணைக்கும் பேச்சுப் பயிற்சி மொழிக் கல்வியின் இன்னுமொரு பிரதான கண்ணி. வகுப்பறைகளில் பாடங்கள் மாணவர்களால் உரத்த குரலில் வாசிக்கப்பட வேண்டும். இதனால் மாணவர்களின் உச்சரிப்பு மேம்படும். சொல்ல வந்த கருத்துக்கேற்ற தொனியும் மெல்லக் கைவரும். வகுப்பில் மாணவர்கள் சகஜமாக இருக்கவும் இந்த வாசிப்பு உதவும். அச்சமும் கூச்சமும் விலகும்.

படித்தல்:

கேட்டலும் பேசலும் வாய்மொழிக் கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவும் திறன்கள். எனில், படித்தலும் எழுதுதலும் எழுத்துவழிக் கருத்துப் பரிமாற்றத்துக்கு உதவுகின்றன. படித்தல் என்பது வெறும் வாசிப்பு மட்டுமில்லை. ஒரு கதையோ, கட்டுரையோ, பாடலோ, விளம்பரமோ சொல்லும் கருத்தை உணர்ந்துகொள்ளும் திறன் முதற்கட்டம். அவை சொல்லும் துணைக் கருத்துகளைப் புரிந்து கொள்வதும், படித்ததை நினைவில் கொள்வதும் அடுத்த கட்டம்.

எழுதுதல்:

ஏதொன்றையும் எழுதும்போது அதில் எழுதுகிறவர் மட்டுமே ஈடுபடுவதால் அது அந்தரங்கமானது என்று தோன்றலாம். ஆனால் எல்லா எழுத்துக்கும் ஒன்றோ அதற்கு மேற்பட்ட வாசகரோ இருப்பதால் அது பொதுவானது என்பதே சரி. எழுத்து நிரந்தரமானது. அதனால் சரியான சொற்களைக் கொண்டு பிழையற எழுதுவது அவசியமாகிறது. கேட்பதை எழுதுவதற்கும், படிப்பதை எழுதுவதற்குமான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

ஹாங்காங்கில் சீனமும் ஆங்கிலமும் பிற மொழிகளும் கற்பிக்கப்படும்போது இந்த நான்கு திறன்களும் மாணவர்களுக்குக் கைவரப்பெற வேண்டுமென்கிற நோக்கிலேயே பாடத்திட்டத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. தேர்வுகளிலும் இந்த நான்கு திறன்களும் தனித்தனியாகப் பரிசோதிக்கப்படுகின்றன.

நான்கு திறனுக்கும் தேர்வுகள்:

கேட்டலுக்கான தேர்வு நடக்கிற தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வானொலியில் ஒருவர் உரை நிகழ்த்துவார். அதன் பிறகு அந்த உரை தொடர்பான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். மாணவர்கள் விடையளிக்க வேண்டும். ஒரு பெற்றோர் கூட்டத்தில் நான் கேட்டேன்: இதை ஏன் இத்தனை மெனக்கெட்டு வானொலியில் ஒலிபரப்ப வேண்டும்? தேர்வுக்கூடத்தில் ஓர் ஆசிரியர் வாசித்தால் போதாதா?

தலைமையாசிரியரிடம் பதில் இருந்தது. வானொலியில் வாசிப்பவர் மொழியியல் வல்லுநராக இருப்பார். உச்சரிப்பு சரிகணக்காக இருக்கும். தவிர, பள்ளியில் வாசித்தால், மாணவர்கள் ஒரு வார்த்தையையோ, வாக்கியத்தையோ தவறவிடலாம், மறுபடியும் சொல்லுமாறு கேட்கலாம், அதனால் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புக் கிடைக்கலாம்.

அடுத்ததாக, மாணவர்களின் பேசும் திறனை மதிப்பிட அவர்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். தேர்வாளர்கள் அவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலை நெறிப்படுத்துவார்கள். படிக்கும் திறனைக் கணிக்கச் சிறு கட்டுரைகள் அல்லது கதைகளைப் படிக்கச் சொல்வார்கள். பிறகு அதனின்றும் வினாக்களை எழுப்பி விடைகளைப் பெறுவார்கள். கடைசியாக, நமக்கு அறிமுகமான முறைகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகள் மூலம் நான்காவது திறன் சோதிக்கப்படும். இப்படிப் பயிற்சி பெறுகிற மாணவர்கள் மொழியின் நான்கு கூறுகளிலும் தேர்ச்சி பெறுவார்கள்.

நான் ஹாங்காங்கின் இளம் பொறியாளர்களோடும் இந்திய இளம் பொறியாளர்களோடும் பணியாற்றியிருக்கிறேன். முன்னவர்களில் கணிசமானவர்களால் மனத்தில் நினைப்பதைச் சரளமாகப் பேசவும், தெளிவாக எழுதவும் முடிகிறது. பின்னவர்களில் அதிகம் பேர் தடுமாறுகிற இடம் இது. இவர்கள் இரு சாரரைவிடவும் மேல்நாட்டு இளைஞர்களால் இதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடிகிறது. பள்ளி, கல்லூரிக் காலம் முழுவதும் எழுத்துத் தேர்வை மட்டுமே எதிர்கொண்டு வளர்ந்த நமது இளைஞர்களில் பலர், முதன் முதலாக நேர்காணலில் அமர்கிறபோது மிகுந்த பதற்றத்துக்கு உள்ளாவதைப் பார்த்திருக்கிறேன். நமது தற்போதையக் கல்வி முறை எழுத்துத் திறனை மட்டும்தான் பரிசோதிக்கிறது. புதிய கல்விக் கொள்கையும் பழைய வழியையே பின்பற்றுகிறது.

எழுதுவது மட்டும் கல்வியாகாது என்பது மொழியியலாளர்களின் கருத்து. கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்களுக்கும் மொழிக் கல்வியில் சரிநிகர் சமானமான இடம் உண்டு. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் கற்பிக்கிற முறையை மேம்படுத்த வேண்டும். அப்போது ஐந்தாவது திறனொன்று அவர்களுக்குக் கைகூடும். அது சுயமாகக் கல்வி கற்கும் திறன். சுய சிந்தனையுள்ள மாணவர்களால் வருங்காலத்தில் வாழ்க்கையை, அதன் பிரச்சினைகளை நேரிட முடியும். நல்ல குடிமக்களாகவும் உருவாக முடியும்.

தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களைக் குறித்து ஆராய கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்தக் குழு தமிழகம் நீண்டகால முயற்சியில் நேடியிருக்கும் பெருமைகளை நிலை நிறுத்திக்கொண்டு, அதேவேளையில் தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும்; மேலும் தமிழும் ஆங்கிலமும் கற்பிக்கிற முறையைக் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு கூறுகளையும் உள்ளடக்கியதாக மாற்ற வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு

மு.இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share