சிறப்புக் கட்டுரை: குடிமைப்பணித் தேர்வுகள் – வாய்ப்புகளைப் பறித்த, பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு (EWS)

Published On:

| By Balaji

கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக் & ஜெயன்நாதன் கருணாநிதி – தமிழில்: சூரியா கிருஷ்ணமூர்த்தி

2019ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணித் தேர்வு முடிவுகள், அதிகாரப்பதவிகள் மீதான முன்னேறிய வகுப்பினரின் ஆதிக்கத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி அல்லாத முன்னேறிய வகுப்பினருள் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ள 10 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின் காரணமாக, இதர பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின சமூகங்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டு, அவற்றில் முன்னேறிய வகுப்பினர் இடம்பெற்றிருப்பது சமீபத்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பிரதமர் உத்தரவாதம்

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில் முன்னேறிய வகுப்பினருள் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அவசர அவசரமாக சட்டமாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு *மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களின் நலன்களை பாதிக்காது” என்று உத்திரவாதம் அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி.* மேலும் பொருளாதார வழி இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை தீயசக்திகள் என்றும், அவர்களை இளைஞர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் (2019) எதிர்த்து வெல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

முன்னேறிய வகுப்பினருள் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்டோர் (27%), பட்டியலினத்தோர் (15%) மற்றும் பழங்குடியினர் (7.5%) என்று வருகிற சமூக ரீதியிலான இட ஒதுக்கீட்டு பிரிவினரின் 49.5 விழுக்காட்டிலிருந்து வழங்கப்படவில்லை. மாறாக, இட ஒதுக்கீட்டு வரம்புக்கு வெளியே சாதி ரீதியிலான வரையறை இல்லாமல் எல்லோரும் போட்டியிடக்கூடிய பொதுப்போட்டி இடங்களிலிருந்து தான் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பார்த்தால், பிரதமர் மோடி அவர்களின் மேற்சொன்ன கூற்று சரியானதாகவே தெரியும். ஏட்டளவில் அது சரியானதும் கூட.

ஆனால், யதார்த்தத்தில் ஏற்கனவே அதிகாரப் பதவிகளில் பெருமளவு இடம்பெற்றுள்ள சமூக ரீதியில் முன்னேறிய பிரிவினர் / சாதியினரை இன்னும் கூடுதலாக அந்தப் பதவிகளில் அமர்த்துவதற்கே இந்த 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு உதவியிருக்கிறது.

ஏட்டில் சரி… யதார்த்தத்தில்?

ஏட்டில் சரியானதாகத் தெரிவது, யதார்த்தத்தில் வேறாக இருக்கிறது.

இந்த 10 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வருபவர்கள், ஜனவரி 2019 வரை இட ஒதுக்கீட்டு வரம்புக்கு வெளியே இருந்தவர்கள் அதாவது 49.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்கான பட்டியலில் இடம்பெறாத சாதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் குடும்பத்தின் ஆண்டு வருவாய் எட்டு லட்சம் அல்லது குறைவாக உடையவர்கள்.

இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்கங்களைச் சேர்ந்தவர்கள், பொதுப்போட்டிக்கு உரிய மதிப்பெண் (Qualifying marks or cutoff) பெறுகிறபோது, அவர்கள் இட ஒதுக்கீட்டு வரம்புக்கு வெளியே உள்ள 50.5 விழுக்காட்டில்தான் பணியமர்த்தப்படுவார்கள், அவர்களுக்குரிய இட ஒதுக்கீட்டு பிரிவின் இடங்களில் அல்ல.

உதாரணமாக ஒரு ஓபிசி பிரிவு மாணவர், பொதுப்போட்டிக்கு உரிய மதிப்பெண்ணைப் பெற்று, பொதுப்போட்டியில் தேர்வாகிறார். எனில், அவருடைய பிரிவில் உள்ள அவருக்கான இடத்தில், பொதுப்போட்டிக்கான மதிப்பெண்ணைவிட குறைவாகவும், ஓபிசிக்கான மதிப்பெண் அல்லது அதற்கு கூடுதலாகவும் பெற்ற இன்னொரு ஓபிசி மாணவர் தேர்வு செய்யப்படுவார்.

இப்படி யூகித்துப் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட தகுதித்தேர்வில் ஓபிசிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 50 மாணவர்கள் தாண்டுகிறார்கள். அதில் 10 மாணவர்கள் பொதுப்போட்டிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணையும் தாண்டுகிறார்கள். (ஓபிசிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணுக்கும், பொதுப்போட்டிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணுக்கும் இடையில் 40 பேர் + பொதுப்போட்டிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் அல்லது அதற்கும் கூடுதலாக 10பேர் = 50பேர்).

அந்தத் தேர்வை அடிப்படையாக வைத்து வழக்கப்படவுள்ள வேலையில் ஓபிசிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் 30. பொதுப்போட்டிக்கான இடங்கள் 40. இதில் பொதுப்போட்டிக்கான மதிப்பெண்ணை பெற்ற 10 ஓபிசி மாணவர்களும், பொதுப்போட்டிக்கான 40 இடங்களில் தேர்வு செய்யப்பட்டால், ஓபிசிகளுக்கான 30 இடங்களில், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள தகுதியான 30 ஓபிசிகள் வேலை பெறுவர்.

எனவே பொதுப்போட்டி இடங்கள், இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராதவர்களுக்கு மட்டுமே உரியது கிடையாது. அதில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் உரிமை உண்டு. ஆகவே இந்த 10 சதவிகிதம் பொதுப்போட்டியிலிருந்து எடுக்கப்பட்டாலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பாதிக்கப்படுவார்கள். இந்த இடத்தில் பிரதமரின் கூற்று யதார்த்தத்தில் தவறாகிப்போகிறது.

இதில் கவனிக்கத் தகுந்த மற்றோர் அம்சம், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 49.5 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களைப் பெறுவது, பொதுப்போட்டிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணைச் சார்ந்திருக்கிறது.

அது குறைவாக இருந்தால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், 49.5 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மாறாக அது அதிகமாக இருந்தால் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

பொதுப்போட்டி இடங்கள் குறையும்போது, போட்டி அதிகமாகி அதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் (qualifying / cut-off marks) அதிகமாகும். அது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

இந்த வகையில் வெற்றிக் கோட்டை தூரமாக தள்ளி வைப்பதன் மூலமாக சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட, இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் நலன்களை, இந்தப் பொருளாதார வழி 10சதவிகிதம் இட ஒதுக்கீடு பாதிக்கிறது.

ஆதிக்கத்தைத் தக்க வைக்க…

மேலும், சிலர் சொல்வதைப் போல பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இந்த 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு சாதிக்கு அப்பாற்பட்டதோ, எல்லோருக்குமானதோ அல்ல. இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத சமூக மற்றும் கல்வி ரீதியாக முன்னேறிய வகுப்பினருக்கானதுதான். பொருளாதாரத்தை இட ஒதுக்கீட்டின் அளவுகோளாக வரையறுத்ததன் மூலமாக சமூகநீதியின் அடிப்படையை சிதைத்தது மட்டுமல்லாமல், அரசுப் பணிகளில் முன்னேறிய வகுப்பினரின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், இந்த 10 சதவிகிதம் ஒதுக்கீடு வழி அமைத்துத் தருகிறது.

இந்த 10 சதவிகிதம் ஆதரவான சிலர் வைக்கக்கூடிய மற்றொரு வாதம், “இந்த ஒதுக்கீட்டில் வரக்கூடியவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண் மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினரைவிடக் கூடுதலாகவும், பொதுப்போட்டியைவிட குறைவாகவும் இருக்கும், எனவே இந்த ஒதுக்கீடு முன்னேறிய வகுப்பினரில் குறைவான தகுதி பெற்றோரை உள்ளடக்கியது, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் இதில் கவலைப்பட என்ன இருக்கிறது” என்பதாகும்.

உண்மையை ஆராய்ந்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். 2019 ஜனவரியில் தொடங்கி தற்போது வரையிலான பல்வேறு வேலைவாய்ப்புத் தேர்வுகளில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைவிட இந்த 10விழுக்காட்டில் வரக்கூடியவர்களின் மதிப்பெண் குறைவாகவே இருக்கிறது.

உதாரணமாக அட்டவணை 1 – சமீபத்தில் வெளியான குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் அடிப்படையில், வெவ்வேறு பிரிவினர் மற்றும் பொதுப்போட்டிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட உயர் அதிகாரப் பொறுப்புகளுக்காக நடத்தப்படும் இந்தத் தேர்வு, மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. தொடக்கநிலை, முதன்மை நிலை அல்லது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல். இதில் இரண்டாம் நிலை மற்றும் நேர்காணல்களின் கூட்டு மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக (இறுதி நிலை) வெளியாகும்.

Table 1: Civil Services Examination, 2019 – Minimum Qualifying Marks

Source: https://www.upsc.gov.in/sites/default/files/Cut_Off_Marks_CS2019_Eng.pdf [Accessed on 31 August 2020]

இறுதி நிலையில் 10% ஒதுக்கீட்டிற்கான குறைந்தபட்ச மதிப்பெண், பிற்படுத்தப்பட்ட பிரிவினரை விட குறைவாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினரைவிடக் கூடுதலாகவும் இருக்கிறது. ஆனால் இரண்டாம் நிலை முடிவுகளைப் பார்த்தால் இவர்கள் மூவரையும் (OBC, SC & ST) விட, 10% வருபவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண் குறைவாக இருக்கிறது. இரண்டாம் நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையில் ஏற்பட்ட மாற்றத்துக்கு காரணம் நேர்காணல்களில் அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது. தனிப்பட்ட திறன்களில் (inter-personal skills) அவர்கள் சிறப்பாக இருப்பதற்கான சான்று இது. அவர்களுடைய அதிகார / ஆதிக்க கலாச்சார சூழல் அதற்கு உதவுகிறது.

ஓபிசிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணைவிட குறைவான மதிப்பெண்ணை பெற்றவர்கள், பொதுப்போட்டியில் 10 சதவிகிதம் இடங்களை பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் பொதுப்போட்டியில் ஓபிசிகளுக்கான வாய்ப்புகள் குறைந்து, மொத்தமாக ஓபிசிகளின் எண்ணிக்கை குறைகிறது.

கூடுதலாக, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் இரண்டாம் நிலையிலிருந்து, மூன்றாம் நிலைக்கு (இறுதி நிலைக்கு) நுழையும் எண்ணிக்கையையும், இந்த 10 சதவிகிதம் ஒதுக்கீடு குறைத்திருக்கிறது, காரணம், மற்ற அனைத்து பிரிவினரை விடவும் இரண்டாம் நிலை முடிவில் இவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண் குறைவானது.

2015ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் முதல் இடம் பெற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இப்படி

பொதுப்போட்டியில், முன்னெப்போதையும்விட சமீப சில வருடங்களாக, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அதிகம் இடம்பெற்று வருகிற சூழலில் மோடி அவர்களின் இந்த 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.

இந்தப் போக்குகள், பல பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின தலைவர்களை, 10% இட ஒதுக்கீடு தங்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் இடம்பெறுவதை தடுப்பதற்கான முயற்சியோ என்று கருத வைக்கிறது. இந்த சந்தேகங்களை கடந்த ஓராண்டில் வெளியான பல்வேறு தேர்வு முடிவுகள் வலுப்பெற செய்கின்றன.

குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இது தொடர்பில் தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ளார்கள்.

மற்றுமோர் உதாரணம்

குடிமைப்பணித் தேர்வுகளைப் போல, மற்றோர் உதாரணம் SBI வங்கி நடத்திய Junior Associateக்கான தேர்வு. அந்தத் தேர்வின் முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் முன்னேறிய வகுப்பினருள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான EWS க்கான குறைந்தப்பட்ச மதிப்பெண் – 28.5, அதேநேரம் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பொதுப்போட்டி – 61.25, பட்டியலின பிரிவினர் – 61.25, பழங்குடியின பிரிவினர் – 53.75.

மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கூடக்குறைய இதே நிலைதான். இத்தகைய முடிவுகள், உயர் சாதியினரின் நலன்களுக்காக பெருவாரி இந்துக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக, பாஜகவை நோக்கி பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழ காரணமாக அமைந்தன.

ஆய்வாளர்கள் கிரிஸ்டோபர் ஜாப்ரிலட் மற்றும் கலையரசன் ஆகியோர் 2013ஆம் ஆண்டு எழுதிய குறிப்பு, நினைவுகூரத்தக்கது. மத்திய அரசின் முதல்நிலை பணிகளில் (Class A) இடம்பெற்றுள்ள ஓபிசிகளின் அளவு 8.37%, இரண்டாம் நிலை பணிகளில் (Class B) 10.01%. இவை படிப்படியாக உயர்ந்து வந்திருக்கிறது, அதே காலகட்டத்தில் அரசுப் பணிகளின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது. உதாரணமாக 2014ஆம் ஆண்டில் குடிமைப்பணித் தேர்வுகளுக்கான இடங்கள் 1,219, 2019ஆம் ஆண்டில் அது 896. கிட்டத்தட்ட 30% குறைந்திருக்கிறது. இது கூடுதலாக மோடி அரசு, செயலாளர்கள் மட்டத்திலான பணிகளுக்கு Lateral entry மூலமாக, இட ஒதுக்கீட்டைக் கருத்தில்கொள்ளாமல் ஆட்களைத் தேர்வு செய்யவும் தொடங்கியிருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கு நேர்மாறாக முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் பொருளாதார வழி இட ஒதுக்கீடு வழங்கியதில் தொடங்கி, கிரிமிலேயர் அளவீட்டுக்கான வரையறைகளில் மாற்றம், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையில்லை என்கிற நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மத்திய மௌனம் வரையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் சமூகநீதிக்கு எதிரான செயல்கள், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்ட பின்தங்கிய சமூகங்களின் நலன்களுக்கு எதிராகவே அமைகிறது.

கட்டுரையாளர் குறிப்பு

கே.ஆர். விக்னேஷ் கார்த்திக், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆய்வு மாணவர். ஜெயன்நாதன் கருணாநிதி, சென்னையில் வசிக்கும் அரசியல் நோக்கர்.

ஆங்கில மூலம் – News Clickஇல் அஜாஸ் அஷ்ரப் மற்றும் கே.ஆர். விக்னேஷ் கார்த்திக் எழுதிய கட்டுரை.

https://www.newsclick.in/UPSC-EWS-Quota-Denies-SCs-STs-OBCs-Their-Due
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share