பாஸ்கர் செல்வராஜ்
பதினாறாம் நூற்றாண்டில் எழும் முகலாய ஆட்சியில் நில அளவை முறை சீர்திருத்தம், இதுகாறும் நம்மிடம் இல்லாத பணத்தின் மூலம் வரியைச் செலுத்தக் கோருவது, ஒரே எடைகொண்ட மொஹர் தங்கக்காசுகள் (11 கிராம்), ருபியா வெள்ளிக்காசுகளின் (11.5 கிராம்) பயன்பாடு ஆகியவை நடைமுறைக்கு வருகிறது. முகலாயப் பேரரசு மட்டுமல்ல; சமகால விஜயநகர ஆட்சியாளர்கள் வெளியிட்ட தங்கக்காசுகளும் (1 பகோடா = 3.26-3.43 கிராம், அரை பகோடா = 1.68-1.71 கிராம்) ஏறக்குறைய ஒத்த எடை கொண்டதாகவே இருந்திருக்கிறது. இதற்கு முந்தைய சோழர்களின் தங்க, வெள்ளிக்காசுகளும் கிட்டத்தட்ட இதே அளவிலும் இதற்குக் குறைவாகவும் இருந்திருக்கின்றன. இந்த நாணயப் புழக்கத்தை இவர்கள் ஆட்சிப் பகுதியை மட்டும் பார்க்காமல் மற்ற உலக நாடுகளுடன் கொண்டிருந்த நில, நீர்வழி வர்த்தகப் பின்னணியில் வைத்து பார்ப்பதன் மூலமே முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.
ஆசிய – ஐரோப்பிய வர்த்தகமும் இந்தியாவும்…
மத்திய கிழக்கு ஆசியாவுடனான நமது நில, கடல்வழி வர்த்தகம் சிந்து சமவெளி நாகரிக காலம்தொட்டு இருந்து வருவது. குஜராத் துறைமுகம் அப்போதுமுதல் இந்த வர்த்தகத்தின் மையமாக இருந்து வந்துள்ளது. இங்கிருந்து நிலம், கடல் வழியாக மத்திய கிழக்கை அடையும் பொருட்கள் அங்கிருந்து எகிப்து, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவை அடையும். இல்லையேல் இந்தியா, சீன நாடுகளில் இருந்து பண்டைய பட்டுச்சாலை என்றழைக்கப்படும் ஆப்கானிஸ்தான், இரான், இராக், சிரியா சென்று அங்கிருந்து துருக்கி வழியாகவோ அல்லது ஆர்மேனியா, அசர்பெய்ஜான் வழியாகவோ ஐரோப்பாவைச் சென்றடையும். ஆப்கானிஸ்தான் வரை நீண்டிருந்த பொஆமு 4-2 நூற்றாண்டுக் கால மௌரியப் பேரரசின் அசோகர் கடைசியாக போரிட்ட கலிங்கம் அப்போது ஆசியாவின் வர்த்தக மையமாக இருந்த மலாக்கா நீரிணைப் பகுதியுடன் தொடர்பில் இருந்திருக்கிறது. இந்தப் பேரரசு உடைந்து நொறுங்கிய பிறகு பொஆ 1-3 நூற்றாண்டுக் காலத்தில் ஐரோப்பாவுடனான வர்த்தகம் தென்னிந்தியாவுக்கு நகர்கிறது. பின்பு 4-6 நூற்றாண்டுக் கால குப்தப் பேரரசு காலத்தில் இந்த வர்த்தகம் மீண்டும் வடக்குக்குச் செல்கிறது.
இந்த ஆசிய – ஐரோப்பிய வர்த்தகத்தின் மையமாக மத்திய கிழக்கு விளங்கியிருக்கிறது. இந்த வர்த்தகத்தின் அங்கமாக இருக்கும் மத்திய கிழக்கின் வணிகர்கள் இதன்மூலம் வளம் கொழித்திருக்கிறார்கள். மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு ரோமப் பேரரசில் ஏற்படும் உடைப்பு மத்திய கிழக்கின் மீதான அதன் ஆதிக்கத்தைக் குறைக்கிறது. பொஆ ஆறாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த வணிகரும், வணிகசாத்தின் (Caravan) தலைவருமான முகமதுநபி உருவாக்கும் இஸ்லாம் மதம் அங்கிருக்கும் இனக்குழுக்களை ஒருங்கிணைத்து இனக்குழுக்களின் கூட்டை (Confederacy) உருவாக்குகிறது. அதுவரையிலும் அங்கிருந்த பாரசீகப் பேரரசு மற்றும் பைசண்டைன் (Byzantines) பேரரசின் ஆதிக்கத்தை வீழ்த்தி, அந்தப் பகுதி முழுக்க விரிவடைகிறது. இந்த இஸ்லாமிய எழுச்சியும் இந்தியாவில் குப்தப் பேரரசின் வீழ்ச்சியும் ஒரே காலத்தில் நடக்கிறது. இதன்பிறகு அராபிய வணிகர்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை துறைமுகங்கள், இலங்கை, மலாக்கா நீரிணைப் பகுதியின் வர்த்தகத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். சிரியா – இராக்கை மையமாகக்கொண்டு எழும் இந்த காலிபேட்டுகள் (Caliphates) சீனாவில் இருந்து நிலவழியாக தடையின்றி ஐரோப்பாவை அடைந்த பொருட்கள் இப்போது இவர்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். நிலவழியைவிட நீர்வழி வணிகம் ஊக்கம் பெறுகிறது. சீன, இந்தியப் பொருட்களைப் பெறுவதற்கு அவசியமான தென்னிந்திய, இலங்கை, மலாக்கா நீரிணைப் பகுதி துறைமுகங்களின் முக்கியத்துவம் கூடுகிறது. இப்போது இந்திய வர்த்தகம் வடக்கில் இருந்து தெற்குக்கு நகர்கிறது.

இந்தியப் பேரரசுகளின் எழுச்சியும் ஐரோப்பிய வர்த்தகமும்…
ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சி வீழ்ந்து இப்போது பாண்டிய, பல்லவர்கள் உள்ளிட்டவர்களின் ஆட்சிகள் எழுவதைப் பார்க்கிறோம். ஏழாம் நூற்றாண்டு முழுவதும் இந்தியாவையும் மத்திய கிழக்கையும் நிலவழியாக இணைக்கும் சிந்து, ஆப்கானிஸ்தான் பகுதிகள் தொடர் மோதல்களைச் சந்திக்கிறது. தடையற்ற கடல்வழி வர்த்தகத்தின் வளர்ச்சி இப்போது தவிர்க்க இயலாததாகிறது. இந்த வர்த்தக வளர்ச்சியோடு சோழர்களின் எழுச்சியும் நடக்கிறது. தமிழகம் பெரும் மாற்றத்தைச் சந்திக்கிறது. இந்த ஆட்சி தென்னிந்தியா முழுக்க பரவி, பதினோராம் நூற்றாண்டில் கிழக்கு கடற்கரை பகுதி வழியாக தென்கிழக்கு ஆசியா வரை நீண்டு இலங்கை, மலாக்கா நீரிணை வரை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவை மையமாகக்கொண்டு எழும் மங்கோலியப் பேரரசு சீனா முதல் ஐரோப்பா வரை விரிவடைந்து, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது. இப்போது நிலவழி பட்டுச்சாலையின் வர்த்தகச் செழிப்பு எதிர்பார்க்கக் கூடியது. அப்போது இங்கே சோழப் பேரரசு உடைப்பைச் சந்திக்கிறது. இப்படி இந்தியாவின் மேற்கு கடற்கரையும் இமயமலைப் பகுதியின் சிந்து, ஆப்கானிஸ்தான் பகுதியும், மலாக்கா நீரிணையும் ஆசிய – ஐரோப்பிய வர்த்தகத்தின் இதயமாக இருந்து வந்திருக்கின்றன. காந்தாரம் வரை பரவியிருந்த மௌரியப் பேரரசின் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்ததும் சோழர்களின் ஆதிக்கம் கடாரம் வரை விரிவடைந்ததும் காரணமின்றி நடக்கவில்லை. அதேபோல அலெக்ஸாண்டர் இந்தியா வரை வந்ததும், அசோகரின் தூதர்கள் சீனா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா முழுக்க சென்றதும் தற்செயலானதும் இல்லை. இவர்களின் இந்த இடையறாத போர் என்பது இப்படியான வர்த்தகம், செல்வத்தின் மீதான வேட்கையாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
மன்னர்களின் தொழில் கொள்ளையும் போரும்…
காடுகளில் வேட்டையாடி உண்டவரை தாய்வழி சமூகமாக இந்த வேட்டை பகுதியை மற்றவர்களிடம் இருந்து காக்கும் பொருட்டும், தேவைக்கேற்ப விரிவாக்கும் பொருட்டும் போரிடும் போர்க்காலத் தலைவர்கள் விவசாயம் வளர்ந்து தனியுடைமை ஏற்பட்டு தந்தைவழி சமூகமாக மாறும்போது தங்களை வாரிசுகளின் அடிப்படையிலான மன்னர் வம்சமாக மாற்றிக் கொள்கிறார்கள். பிறரின் செல்வத்தைக் கொள்ளையிடுவதையே இவர்கள் தொழிலாக கொள்கின்றனர் என்கிறார் ஏங்கல்ஸ். இந்தக் கொள்ளை மக்களிடம் வரியாகவும், மற்றவர்களிடம் போரிட்டு வெல்வதன் மூலமாகவும் நடக்கிறது. இப்படி கொள்ளையிடுவதற்கான செல்வம் விவசாய உற்பத்தி, வணிகம், வர்த்தகத்தின் மூலமாக ஏற்படுகிறது. இப்படி கொள்ளையிடும் செல்வத்தை மூலதனமாகக் கொண்டு போரிடும் மன்னர்கள் அதன்மூலம் மேலும் மேலும் நேரடிக் கொள்ளை மற்றும் மறைமுக வரிக் கொள்ளை மூலம் செல்வத்தைக் குவிக்கிறார்கள். இதில் படை, நிர்வாகம், வணிக குழுக்களைச் சேர்ந்தவர்கள் இவர்களின் அங்கமாகச் செயல்பட்டு பலனடைகிறார்கள். ஆக, மன்னர்கள் என்பவர்கள் மக்களின் பார்வையில் அயோக்கிய திருட்டுக் கொள்ளையர்கள்தான். ஆனால், முகமது கஜினி போன்ற முஸ்லிம் மன்னர்கள் கோயில்களைக் கொள்ளையடித்தார்கள் என்றும் இந்தியாவை ஆண்டவர்கள் ஏதோ உத்தமபுத்திரர்கள் போன்றும் ஒரு வரலாற்றுப் பார்வை இங்கே ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
அவர்களின் தன்மையின் சற்று ஏற்ற இறக்கம் இருந்திருக்கலாம். எல்லா குறுக்கு வழிகளையும் பயன்படுத்தி எப்படியாவது என் செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்று செயல்படும் அம்பானி – அதானியைவிட முதலாளித்துவ விழுமியங்களுடன் உற்பத்தி செய்து பொருளை விற்று லாபமீட்டி அதற்கு உதவும் தொழிலாளர்களிடம் கரிசணையுடன் நடக்கும் டாட்டாவை இன்று ஒப்பீட்டளவில் பரவாயில்லை என நாம் நினைப்பதைப்போல அன்று இவர்களில் சிலரை அந்தக் கால மக்கள் இந்த பரவாயில்லை ரகத்தில் வைத்திருக்கலாம். ஆனால், அடிப்படையில் அனைவரும் கொள்ளையர்களே.
இன்று அம்பானிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் இவர்களையும் ஆட்சியாளர்களையும் புகழ்வதைப்போல அன்று இவர்களை அண்டி வாழ்ந்த புலவர்கள் இவர்களைப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். வணிக குழுக்களின் அரசியல் முகமாக அன்று வாளேந்தும் மன்னர்கள் இருந்தார்கள். இன்று வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அவ்வளவே.

ஆசிய-ஐரோப்பிய வர்த்தகப் பாதையும் ஆட்சி மாற்றங்களும்…
அன்றைய பட்டுச்சாலை மற்றும் கடல்வழியில் நடந்த ஆசிய – ஐரோப்பிய வர்த்தகம் எல்லா அரசியல் மாற்றங்களையும் தாண்டி இடைவிடாமல் நடந்து வந்திருக்கிறது. அதற்கு வெள்ளி, தங்கக்காசுகள் வர்த்தக ஊடகமாக இருந்திருக்கிறது. இந்தியாவும் சீனாவும் பொருளுற்பத்தி மையங்களாக இருந்திருக்கின்றன. மத்திய கிழக்கு ஆசியா இந்த வர்த்தகத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்திருக்கிறது. மக்களுக்குள் பரிவர்த்தனையற்ற பார்ப்பனியப் பொருளாதாரம் நிலவிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் உலோகக்காசுகளை வெளியிட்டதை இந்த வர்த்தகப் பின்னணியைக் கொண்டே ஆராய வேண்டி இருக்கிறது. இதன் பிறகு நம்மிடம் உருவான பணப்பரிவர்த்தனையை இதன் தொடர்ச்சியிலேயே பார்க்க வேண்டி இருக்கிறது.
சோழப் பேரரசின் உடைவுக்குப் பிறகான 13-14ஆம் நூற்றாண்டு இந்தியா பல சிற்றரசுகளாக உடைந்து இந்து, முஸ்லிம் மன்னர்களால் ஆளக்கூடியதாகவும் மத்திய ஆசியா மங்கோலிய பேரரசின் ஒருங்கிணைந்த ஆட்சியின் கீழும் இருந்திருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டில் உடையும் மங்கோலியப் பேரரசு மத்திய ஆசியாவை பலரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளாக மாற்றுகிறது. அதைத் தொடர்ந்து சீனாவில் எழும் மிங் வம்ச ஆட்சியும் யூரேசிய பகுதியை இணைக்கும் பாலமாக விளங்கும் துருக்கியில் எழும் ஓட்டோமான் பேரரசும் பட்டுச்சாலை நிலவழி வர்த்தகத்தில் உடைப்பை ஏற்படுத்துகின்றன. பதினைந்தாம் நூற்றாண்டில் ஆசியாவுக்கு நெருக்கமாக இருக்கும் கிழக்கு ஐரோப்பா வழியான நிலவழி பட்டுச்சாலைக்கும், மத்திய கிழக்கில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாகச் செல்லும் கடல்வழிப் பாதைக்கும் பதிலாக அட்லாண்டிக் கடல் பகுதியில் இருக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாற்று வழிகளைத் தேடுகிறார்கள்.

மாற்றுப்பாதையும் மாறிய வர்த்தகமும்…
அட்லாண்டிக் பகுதியில் இருக்கும் போர்ச்சுகலைச் சேர்ந்த வாஸ்கோடாகாமா அங்கிருந்து இன்றைய தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் ஆப் குட்ஹோப்பை (Cape of Goodhope) அடைகிறார். அப்போது மலாக்கா நீரிணை, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய அனைத்து துறைமுகங்களுடன் வர்த்தகத் தொடர்பில் இருக்கும் சூரத் வணிகர்கள், ‘நீங்கள் கேட்கும் மிளகு உள்ளிட்ட காரப்பொருட்கள் இங்கிருந்துதான் வருகிறது’ என கோழிக்கோட்டை கைகாட்ட அவர் 1497-99இல் அங்கே வந்திறங்குகிறார். வந்த வேகத்தில் போர்ச்சுகீசியர்கள் இந்தப் பகுதியில் உள்ள துறைமுகங்களைக் கைப்பற்ற முனைகிறார்கள். அதுவரையிலும் துறைமுகப் பகுதிகளை ஆதிக்கம் செய்துவந்த அராபிய வணிகர்களுடன் அது மோதலை ஏற்படுத்துகிறது. நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த போர்ச்சுகீசியர்கள் இறுதியில் வெற்றி அடைவது மட்டுமல்ல; மலாக்கா நீரிணை, இந்திய துறைமுகங்கள், இரானிய பகுதியின் ஹெர்முஸ் ஆகிய அனைத்து துறைமுகங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பதினாறாம் நூற்றாண்டில் அவர்களின் முற்றுருமையை நிலைநாட்டுகிறார்கள்.
இதேகாலத்தில் விஜயநகரப் பேரரசு தென்னிந்தியாவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. முன்பு ஆட்சியை இழந்த மங்கோலிய பேரரச வம்சத்தை சேர்ந்த பாபர் மத்திய ஆசியாவின் உஸ்பெகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகிறார். அவரின் பேரனான அக்பர் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் காந்தாரம் முதல் குஜராத், வங்காளம் வரையான பகுதியை தனது ஆளுகைக்குக் கொண்டுவந்து முகலாயப் பேரரசை நிறுவுகிறார். மௌரியப் பேரரசைப் போல நிலம் மற்றும் நீர்வழியாக வர்த்தகம் செய்யும் வாய்ப்பை முகலாயப் பேரரசு பெறுகிறது. குஜராத் துறைமுகத்தின் வழியாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்களின் கப்பல்கள் வணிகத்தில் ஈடுபடும் அதேவேளை ஆசியாவை கிழக்கு ஐரோப்பாவுடன் இணைக்கும் இடமான துருக்கியில் எழும் ஒட்டோமான் பேரரசுடனும் அக்பர் நல்லுறவைப் பேணுகிறார்.
பார்ப்பனிய குவிப்பும் ஒத்த அளவுள்ள தங்க – வெள்ளிக்காசுகளும்…
சீன, இந்திய நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்ற இருவழிகளோடு வாஸ்கோடகாமா கண்டறிந்த புதிய கடல்வழியான தென்னாப்பிரிக்கா வழியாக மேற்கு ஐரோப்பாவை அடைகின்றன. இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் முகலாயப் பேரரசும், விஜயநகரப் பேரரசும் நாடு முழுவதும் ஒரே அளவுள்ள தங்க, வெள்ளிக்காசுகளை வெளியிடுகின்றன. மன்னனுக்குச் சொந்தமான நிலத்தில் மக்கள் உழைத்து உருவாக்கும் பொருட்கள் அவர்கள் உயிர்வாழ்வதற்கு எடுத்துக்கொண்டதுபோக எஞ்சியிருக்கும் உபரி அனைத்தும் ஆட்சியாளனை அடைந்தபிறகே பரிவர்த்தனைக்குரிய பண்டமாக மாறும் இந்தப் பார்ப்பனிய பொருளாதார முறையில் ஏன் இவர்களிடம் இந்த உபரியைக் குவித்துக் கொண்டார்கள் இதை யாருடன் பரிவர்த்தனை செய்து கொண்டார்கள் ஆகிய கேள்விகளுக்கான விடையையும் இவர்கள் உருவாக்கிய தங்க வெள்ளி நாணயங்கள் எந்த பரிவர்த்தனையில் ஈடுபட்டன என்ற கேள்விக்கான விடையையும் இங்கே நாம் கண்டடைகிறோம்.
இந்த உபரி பரிமாற்ற மதிப்பின் உருவமான தங்கத்தையும் வெள்ளியையும் இந்திய வணிகர்களும் ஆட்சியாளர்களும் தங்களிடம் குவிக்கிறார்கள். இதை அடையும் வேட்கையில் போரிட்டு கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். தலைமுதல் கால்வரை மாட்டிக்கொண்டு பெருமைபட்டுக் கொள்கிறார்கள். இந்த செல்வச்செழிப்பின் அடையாளமான இந்த உலோகங்களால் மற்ற மக்களும் ஈர்க்கப்பட்டு அவர்களையும் இதைக் குவித்துக்கொள்ள தூண்டுகிறது. அந்த வேட்கை இன்றுவரையிலும் நம்மிடம் குறையாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான சமூக பொருளாதார முறையில் பணத்தின் மூலம் முகலாயர்கள் வரியாக பெற்றிருக்கிறார்களே… அது எப்படி என்று வினவிய பேராசிரியர் இர்பான் ஹபிப்பின் கேள்வியும் அக்பரின் மதரீதியிலான ஒருங்கிணைப்பை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வியும் இன்னும் தொக்கி நிற்கின்றன.
இதற்கான விடையை நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
