பிரதமர் மோடியின் மதுராந்தகம் கூட்டத்தில் பங்கேற்க தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் வந்து கொண்டிருப்பதால் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பிற்பகல் 1.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை வந்தடைகிறார்.
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்துக்கு செல்கிறார்.
மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் மாலை 3.10 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மாலை 4.15 மணிக்கு மதுராந்தகத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பும் மோடி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மதுராந்தகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பர் என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால் அதிகபட்சமாக 1.5 லட்சம் பேர் இந்தக் கூட்டத்துக்கு வருகை தர வாய்ப்புள்ளது.
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் கடந்த 4 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
பொதுக்கூட்ட மேடைக்கு முன்னதாக 40,000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் 25,000 பேர் இந்த கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுக்கூட்டத்துக்கு வந்துள்ள பாஜகவினர் ஒரே இடத்தில் அமர வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மேடையின் முன்பு தொடங்கி பின் வரிசை வரை ஒவ்வொரு பாக்ஸ் அமைப்பிலும் பாஜகவினர் ஆங்காங்கே இருக்குமாறு அமர வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்துள்ள பாஜக நிர்வாகிகளிடம் கேட்ட போது, “எப்படியும் மோடிஜி பேசும் போது பாரத் மா தாகீ ஜே”ன்னு முழக்கம் போடுவார்.. அப்போ ஒட்டுமொத்த கூட்டமும் கோஷம் போட்டாதானே நல்லா இருக்கும்.. அதுக்குதான் முன்னேற்பாடா மேடையின் முன் பகுதியில் இருந்து கடைசி வரை எங்க ஆட்களை உட்கார வைக்கிறோம்” என்கின்றனர்.
அதேபோல இந்த கூட்டத்திலும் அண்ணாமலையின் பெயரை உச்சரித்ததும் அவரது ஆதரவாளர்கள் வழக்கம் போல எழுந்து நின்று காவி துண்டை சுழற்றி காண்பிக்கவும் தயாராக இருக்கின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால் பெருமளவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
