பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Special amendment to the voter list
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு அவையிலும் ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இரண்டாம் நாள் இன்று (ஜூலை 22) காலை 11 மணிக்கு அவை கூடியதும் சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் எதிர்க்கட்சி எம்பி.க்கள் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பியதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டி ஆர் பாலு, கனிமொழி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.amendment to the voter list
