அதிமுகவின் எஸ்பி வேலுமணி அணி எம்.எல்.ஏ. அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா (Isakki Subbiah) தமது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இன்று மே 26-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் கொடுத்தார். ஆனால் இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக எஸ்பி வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தமது எம்.எல்.ஏ. பதவிகளை நேற்று (மே 25) ராஜினாமா செய்தனர். பின்னர் தவெகவில் 3 பேரும் இணைந்தனர். இந்த 3 பேரின் ராஜினாமா கடிதங்களையும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நேற்றே ஏற்றுக் கொண்டார். மேலும் இந்த 3 பேர் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இசக்கி சுப்பையா தந்த ராஜினாமா கடிதம் (Isakki Subbiah)
இந்நிலையில் எஸ்பி வேலுமணி அணியில் உள்ள அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா இன்று பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கொடுத்தார். ஆனால் இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்க மறுத்தார்.
மேலும், “எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதிய கடிதத்தை மட்டுமே ஏற்க முடியும்; தட்டச்சு செய்து அதில் கையெழுத்திட்ட கடிதத்தை ஏற்க முடியாது” எனவும் இசக்கி சுப்பையாவுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல் வழங்கினார்.

சபாநாயகரிடம் எடப்பாடி அணி மனு (Speaker)
முன்னதாக, தகுதி நீக்க புகாருக்கு உள்ளான அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அணியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தனர்.









