தமிழக அரசுப் பள்ளிகளில் ஸ்டிக்கர் ஒட்டும் மத்திய அரசு: சபாநாயகர் அப்பாவு அட்டாக்

Published On:

| By Kavi

தேசிய கல்விக் கொள்கை என்பது ஏழை எளிய மாணவர்களை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் என நெல்லையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். Speaker appavu attack Central Government

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணை வளாகத்தில் திருநெல்வேலி தென்காசி மாவட்ட பால் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்கள் சங்க ஆவின் நல்லுறவு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். ஆவின் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.1 முதல் 14 வயதுள்ள மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என 2002 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போதைய திட்டம் சமக்கிர சிக்ஷா அபியான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 20,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு 40 லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.இத்திட்டத்திற்கான நிதியில் 60% மத்திய அரசும் 40 சதவீதம் மாநில அரசும் கொடுத்து வருகிறது.

திட்டத்திற்காக மத்திய அரசு தரும் நிதி 2152 கோடியை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது இந்த நிலையில் தான் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மத்திய கல்வி அமைச்சர் புரிதல் இல்லாமல் தேசிய கல்விக் கொள்கையுடன் சமகிர சிக்ஷா அபியான், பி.எம்.ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை இணைத்து குழப்பிவருகிறார்.தேசிய கல்விக் கொள்கையின் மூலம் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பது உள்ளது.

ஆனால் அந்த வகுப்புகளில் மாணவர்கள் தோல்வியுற்றால் குலக்கல்வி முறைக்கு செல்லும் அவல நிலை ஏற்படும். ஆகவேதான் முதலமைச்சர் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறார்.இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது.

உதாரணமாக பீகார் மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் 51% ஆக படித்த மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவீதமாக குறைந்துவிட்டது. 20 சதவீதம் மாணவர்கள் காணாமல் போய்விட்டனர். சாமானிய மக்களையும் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் தேசிய கல்விக் கொள்கை திட்டம்.பி எம் ஸ்ரீ என்ற திட்டத்தை இந்தியா முழுவதும் 16,000 பள்ளிகளில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உதாரணமாக தமிழகத்தில் இத்திட்டத்தில் நல்ல கல்வித்தரம் மிகுந்த நல்ல கட்டமைப்புடன் உள்ள 200 முதல் 300 பள்ளிகளை தேர்வு செய்து பி எம் ஸ்ரீ என்ற ஸ்டிக்கரை ஒட்டி நாங்கள் நிதி தருகிறோம் என சொல்லும் நிலை உருவாக உள்ளது.ஏற்கனவே நன்றாக படிக்கும் மாணவர்கள், நல்ல கட்டமைப்புள்ள பள்ளிகளை வைத்திருக்கும் நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறோம். 60% மத்திய அரசு நிதி தருவதாகவும் 40 சதவீதம் மாநில அரசு நிதியில் இந்த பள்ளிகளை இயக்க வேண்டும் எனவும் சொல்லி வருகிறார்கள்.

ஏற்கனவே சமகிர சிக்ஷா அபியான் திட்டத்திலும் இதே போன்ற நிதியை தருவதாக சொல்லிவிட்டு நிறுத்தி வைத்து விட்டார்கள். வருங்காலங்களில் இந்த பள்ளிகளுக்கும் நிதியை நிறுத்திவிட்டு அம்பானி அதானி போன்ற பெரு நிறுவனங்களிடம் தனியார் மயமாக்கும் வகையில் பள்ளிகளை ஒப்படைக்க இந்த திட்டம் வழிவகை செய்யும்.இந்த திட்டத்தின் மூலம் ஒன்று முதல் ஐந்து வரை தமிழ் படித்துக் கொள்ளலாம்,

ஆனால் ஆறாம் வகுப்புக்கு பிறகு இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும். இத்திட்டம் தமிழ் மொழியை அழிக்கும் ஒரு திட்டமாக இருப்பதால் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்” என தெரிவித்தார். Speaker appavu attack Central Government

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share