அ.குமரேசன்
பண்டிகைக் கால போனஸ் என்று அரசாங்கமும் நிறுவனங்களும் வழங்குகின்றன. அதை ஏன் மதங்கள் சார்ந்த பண்டிகைகளோடு அடையாளப்படுத்தி வழங்க வேண்டும்? நாட்டின் சுதந்திர தினத்தையொட்டியோ, குடியரசு தினத்தையொட்டியோ அதை வழங்கக்கூடாதா? இது நாட்டுப்பற்றை வளர்ப்பதற்கும் உதவும் அல்லவா? இந்த தினங்களின் கொண்டாட்டங்களில் ஒரு சடங்காக அல்லாமல் உணர்வுப்பூர்வமாக பங்கேற்பதற்கும் இட்டுச்செல்லும் அல்லவா?”
– பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றியபோது இப்படி ஒரு கேள்வியை நான் முன்வைத்தேன். அவையில் பலர் கைதட்டினார்கள். கூட்டத் தலைவர் குறுக்கிட்டு, “எந்தப் பெயரிலாவது போனஸைக் கொடுக்கட்டும். ஒவ்வொரு வருஷமும் பெரிய போராட்டம் நடத்தியல்லவா போனஸ் வாங்க வேண்டியிருக்கிறது” என்றார். அவையில் எல்லோரும் கைதட்டினார்கள்.
நல்ல விஷயம்
லத்தீன் மொழியிலிருந்து வந்த “போனஸ்” என்ற சொல்லுக்கு “நல்ல” என்று பொருள். பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றை இந்தச் சொல்லோடு சேர்த்துச் சொல்வார்கள். நல்ல விஷயம், நல்ல நிகழ்வு இப்படி. வழக்கத்தைவிடக் கூடுதலான பலன் ஒன்றைக் குறிப்பதற்கான சொல்லாக இது ஆங்கிலத்தின் வழியாக உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் புழக்கத்திற்கு வந்துவிட்டது – போனஸ் போலவே.
பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்ட நாட்களையொட்டி போனஸ் அறிவிக்கின்றன. குறிப்பிட்ட தொகைக்குப் பொருட்கள் வாங்குகிறபோது விலைத்தள்ளுபடி, கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகைக்கான பொருட்கள் என்ற முறையில் அந்த போனஸ் தரப்படுகிறது. பத்திரிகை நிறுவனங்கள் விழாக்கால போனஸ் என, குறைக்கப்பட்ட சந்தாத் தொகைக்குக் கூடுதல் மாதங்களுக்கு இதழ்களை அனுப்புகின்றன. விளையாட்டுகளுக்கான அமைப்புகள் கூட சில வெற்றிச் சாதனைகளுக்காக எனக் குழுவின் நட்சத்திரங்களுக்கு அல்லது ஒட்டுமொத்தமாகக் குழுவினர் எல்லோருக்குமாக ஒப்பந்தத் தொகையைவிடக் கூடுதலாக போனஸ் தருகின்றன.
ஆயினும் நடைமுறையில் பொதுவாகத் தொழிலாளர்களுக்கு அவர்களது வழக்கமான ஊதியத்துடன், கூடுதல் பணப்பலனாக வழங்கப்படுவதே போனஸ் என்று எடுத்துக்கொள்கிறோம். தொழிலகங்களின் தொழிலாளர்கள், நிறுவனங்களின் பணியாளர்கள், அரசுத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட உழைப்பாளிகளுக்கு அந்தந்த நிர்வாகங்களால் இந்த போனஸ் வழங்கப்படுகிறது. இது, அவர்கள் புத்தாடைகள், சுற்றுலாக்கள் போன்ற தங்கள் விழாக்காலத் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளவும், வீடுகளுக்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கிப்போடவும் உதவியாக இருக்கிறது. போனஸ் தொகையால் கடன்களை அடைத்துவிட்டுப் புதிய கடன்கள் வாங்குவோரும் உண்டு. தள்ளிப்போட்டு வந்த மருத்துவ சிகிச்சையைக் கூட போனஸ் தொகையைக்கொண்டு மேற்கொள்கிறவர்களையும் காண முடியும்.
மூவகை போனஸ்
ஊழியரின் வழக்கமான ஊதியத்துக்கு மேல் வழங்கப்படுகிற ஒரு நிதி ஈடு, ஒரு நிறுவனம் சிறப்பான செயல்பாட்டுக்காகவென ஓர் ஊக்கத்தொகையாக அல்லது பரிசுத்தொகையாக வழங்குவது என்று போனஸ் பற்றி பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். அது ரொக்கமாகவோ, நிறுவனத்தின் பங்குத்தொகையாகவோ, பங்குகளுக்கான கூடுதல் ஈட்டுத்தொகையாகவோ வழங்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். பணிகளில் குறிப்பிட்ட சாதனைகளுக்கான பரிசாக, நிறுவனத்தின் இலக்குகளை அடைய உதவியதற்கான நன்றியறிதலாக, நிறுவனத்தில் இன்னும் இணையாமல் வெளியே உள்ளவர்களை உள்ளே வரவைப்பதற்கான ஒரு ஈர்ப்பு நடவடிக்கையாக அடிப்படை ஊதியத்துடன் கூடுதல் போனஸ் வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
போனஸ் வழங்குவதில் மூன்று வகைகள் இருப்பதாக நிதிச் செயல்பாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். கையொப்ப போனஸ் (சைனிங் போனஸ்), கலந்தாய்வுப் பரிந்துரை போனஸ் (ரெஃபரல் போனஸ்), ரிடென்ஷன் போனஸ் (தக்கவைப்பு போனஸ்) என்று அவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். கையொப்ப போனஸ் என்றால், மிகத் திறமை வாய்ந்த ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் பணிநிலையை ஏற்கச் செய்வதற்காக நிர்வாகங்களால் தரப்படுகிற ஊக்கத் தொகை. குறிப்பாக, போட்டி நிறுவனங்களின் வலை விரிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களுக்கு இந்த சைனிங் போனஸ் வழங்கப்படுமாம்.
கலந்தாய்வுப் பரிந்துரை போனஸ் என்பது, நிறுவனத்தின் குறிப்பிட்ட பதவி நிலைகளுக்கு ஏற்ற திறமையாளர்களைப் பரிந்துரைக்கக்கூடிய ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாம். இது பணி நெறிகளை உறுதியாகப் பின்பற்றக்கூடிய, கூர்மையான திறமைகள் இருக்கக்கூடிய, ஆக்கபூர்வமான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கக்கூடிய தகுதியாளர்களைப் பரிந்துரைப்பதற்கு ஊழியர்களை ஊக்குவிக்கிறதாம்.
விசுவாசத்திற்கான பரிசாகத் தரப்படுவது தக்கவைப்பு போனஸ். குறிப்பாக நிறுவனம் சவால் மிக்க காலக்கட்டத்தைக் கடக்க நேரிடுகிறபோது, நிர்வாக மாற்றங்கள் செய்யப்படுகிறபோது அந்த விசுவாசத்தோடு உழைத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஒரு நன்றிக்கடனாகவும், தங்கள் வேலை தொடர்வதற்கு உத்தரவாதம் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிற முயற்சியாகவும் இந்த போனஸ் தரப்படுகிறது.
இவை தவிர, செயல்பாட்டு போனஸ் என்று சில பெரிய நிறுவனங்கள் வழங்குவதுண்டு. நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி அல்லது விற்பனை இலக்கை எட்டுவதற்குப் பணியாற்றியதற்கான இந்த போனஸ், அந்தப் பணியில் ஈடுபட்ட தனிப்பட்ட ஊழியர்களுக்கு அல்லது ஒரு குழுவுக்கு என வழங்கப்படும். சில நேரங்களில், மற்ற ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். ஊழியர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டால் தொழிலைப் பாதிக்கும் என்பதற்காக, அதைத் தவிர்க்கிற நோக்கத்துடன் இப்படியான போனஸ், நேரடியாக இதில் சம்பந்தப்படாத தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுவதுண்டு.
ஆக, அடிப்படையில் நிறுவனத்தின் லாபகரமான வருவாயை அடிப்படையாகக்கொண்டு, அதை உறுதிப்படுத்துவதற்காக, திறமையான தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிற பரிசு அல்லது ஊக்கத்தொகைதான் போனஸ் என்ற புரிதல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உற்பத்தித் திறன் அடிப்படையில் போனஸ் என்று அவ்வப்போது அறிவிக்கப்படுவதையும், அதைத் தொழிலாளர் அமைப்புகள் ஏற்க மறுப்பதையும் பற்றிய தகவல்கள், விழாக்காலச் செய்திகளோடு வருவதைப் பார்க்கிறோம்.
பரிசு தரக் கட்டாயப்படுத்தலாமா?
“என்னங்க இது, ஒரு நிர்வாகம் ஒப்பந்தப்படி தர வேண்டிய சம்பளத்தைத் தரவில்லை என்றால் எதிர்க்கலாம், முறையான ஊதிய உயர்வை மறுத்தால் கண்டிக்கலாம். ஆனால், போனஸ் என்பது நிர்வாகம் மனமுவந்து, தானாக முன்வந்து தருகிற ஒரு பரிசு. அது ஒண்ணும் கட்டாயமில்லை. இந்த வருஷம் பிசினஸ் சரியா போகலை என்ற அடிப்படையில் போன வருஷத்தை விடக் குறைவாக போனஸ் தர்றாங்கன்னா அதையும் எதிர்த்துப் போராட்டம் நடத்துறது எப்படி நியாயமாகும்” என்ற விமர்சனங்களும் அப்போது உலாவரும்.
தொழிற்சங்கத் தலைவர்கள் தங்களுடைய பைகளை நிரப்பிக் கொள்வதற்காக இப்படித் தொழிலாளர்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்று போனஸ் கோரிக்கைப் போராட்டங்களையும், அந்தப் போராட்டங்களுக்கு வழிகாட்டுகிறவர்களையும் கொச்சைப்படுத்துவதற்கும் சில பொருளாதார வல்லுநர்கள் கிளம்புவார்கள். இன்றைய நிலைமையில் வேலை கிடைப்பதே அரிது, கிடைத்த வேலை நிலைக்குமா என்பது கேள்விக்குறி, இப்படிப்பட்ட சூழலில் இவ்வாறு போராட்டத்தில் இறங்குவது தொழிலாளர்களுக்குத்தான் ஆபத்து என்று பயமுறுத்துவதிலும் சிலர் இறங்குவார்கள்.
உண்மையில் போனஸ் என்பது என்ன? அது அரசாங்கமோ, தனியார் நிர்வாகமோ கருணையோடு அளிக்கிற பரிசுத்தொகைதானா? அது தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமை இல்லையா?
முன்பு அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு போனஸ் என வழங்கியதில்லை. அரசாங்கம் ஒரு வர்த்தக நிறுவனமல்ல, ஆகவே லாப அடிப்படையில் இயங்கும் வர்த்தக நிறுவனம் போல அரசாங்கம் போனஸ் வழங்க வேண்டியதில்லை என்ற வாதத்தை இப்போதும் சில வல்லுநர்கள் முன்வைக்கிறார்கள். அதே வல்லுநர்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகிறபோது, லாப-நஷ்டம் பார்க்கிற ஒரு முதலாளி போல அரசாங்கம் செயல்படலாமா என்று எழுப்பப்படுகிற குரல்களுக்குக் காது கொடுப்பதில்லை.
சட்டம் வந்ததன் பின்னணி
இந்தியாவில் ‘போனஸ் வழங்கல் சட்டம் – 1965’ என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. 2019இல் அந்தச் சட்டம் திருத்தப்பட்டு, புதிய போனஸ் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. போனஸ் என்பது சட்டபூர்வமானதுதான் என்பதற்கு 1965ஆம் ஆண்டின் சட்டமும், 2019ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டமும் ஆதாரமாக நிற்கின்றன. இந்தச் சட்டங்கள் தாமாகவும் வந்துவிடவில்லை, அரசுகள் கருணையோடும் கொண்டுவந்துவிடவில்லை. உழைப்பாளி மக்களின் நெடிய போராட்ட வரலாறு, எழுத்துபூர்வமான இந்தச் சட்டங்களின் எழுதப்படாத முன்னுரைகளாக இருக்கின்றன.
ஆனால் 1965ஆம் ஆண்டின் போனஸ் சட்டத்தின் எழுதப்பட்ட முன்னுரையில் உள்ள வரிகள் அந்தப் போராட்டத்தின் தாக்கத்தை உணர்த்துகின்றன. “இந்தியாவில் போனஸ் வழங்கும் நடைமுறை முதலாம் உலகப் போரின்போது தொடங்கியதாகத் தெரிகிறது, 1917இல் சில துணிநெய்வு ஆலைகள் தங்கள் தொழிலாளர்களுக்கு போர் போனஸாக ஊதியத்தில் 10% அளித்தன. சில தொழில் தாவாக்களில் போனஸ் வழங்கலுக்கான கோரிக்கையும் சேர்க்கப்பட்டது. 1950இல், போனஸ் வரையறுப்புக்கான ஒரு வகை முறைமையை தொழிலாளர் முறையீட்டு மன்றத்தின் முழு அமர்வு உருவாக்கியது. அந்த வகை முறைமையை உயர்த்த ஒரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. புதுதில்லியில் 1960 மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற தொழிலாளர் நிலைக்குழுவின் (இந்திய அரசாங்கம்) இரண்டாவது, மூன்றாவது கூட்டங்களில் போனஸ் பற்றி ஆராய்வதற்கும், பொருத்தமான முறைகளை உருவாக்குவதற்கும் ஒரு குழுவை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு லாபத்தை அடிப்படையாகக் கொண்ட போனஸ் வழங்குவது தொடர்பாக ஒரு விரிவான முறையில் பரிசீலிக்கவும் அரசாங்கத்திற்குப் பரிந்துரைகள் அளிக்கவும் இந்திய அரசாங்கத்தால் ஒரு முத்தரப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரைகளை சில திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இந்தப் பரிந்துரைகளைச் செய்முறைப்படுத்துவதற்காக 1965 மே 29 அன்று போனஸ் வழங்கல் அவசரச் சட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த அவசரச் சட்டத்தை மாற்றியமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் போனஸ் வழங்கல் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது” என்று அந்த முன்னுரையின் முதல் பத்தியிலேயே சொல்லப்பட்டுள்ளது.
போனஸ் சட்டத்துக்காக நாடு முழுவதும் நடைபெற்ற உழைப்பாளி வர்க்கப் போராட்டங்கள், பின்னர் அந்தச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்கும், சட்டப்படி போனஸ் வழங்குவதற்குமான போராட்டங்களாக உருவெடுத்தன. அத்துடன் அந்தச் சட்டத்தில் இருந்த முக்கியமான, கால மாறுதல்களுடன் பொருந்தாத, பல தொழிலாளர்களுக்கு நியாயம் செய்யாத குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களும் தொடர்ந்தன.
கொடுபடாத ஊதியம்
“போனஸ் என்பது சலுகைத் தொகையோ கருணைப் பணமோ அல்ல, அது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை” என்று திட்டவட்டமான குரலில் கூறுகிறார், தொழிலாளர்கள் பல அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்ட அனுபவங்களால் முதிர்ந்தவரான மூத்த தொழிற்சங்கத் தலைவர் ஏ.கே.பத்மநாபன். “இதை உச்ச நீதிமன்றமே உறுதிப்படுத்தியிருக்கிறது. லாப விகிதத்திலிருந்து தொழிலாளர்களுக்குக் கிடைக்கிற பங்குதான் போனஸ் என்பது உண்மையே. அந்த லாபம் என்பது ஊதியம் உட்பட உற்பத்திச் செலவுகள் அனைத்தும் போகக் கிடைப்பதுதான். முதலீடு ஒரு குறிப்பிட்ட பங்குதான். அது உற்பத்தியாக மாறி லாபமாக உருவெடுப்பது தொழிலாளர்களின் உழைப்பு இருக்கிறது. ஆகவே போனஸ் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படாத ஊதியத்தின் ஒரு பகுதியாகிறது” என்றார்.

சிஐடியு சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரான பத்மநாபன் அரசு ஊழியர்களுக்கான போனஸ் பற்றிய கேள்விக்கும் போராட்ட வரலாற்றையே நினைவுகூர்கிறார்: “போனஸ் சட்டத்தில் அரசு ஊழியர்கள் உட்படுத்தப்படவில்லை. ஆகவே அரசு ஊழியர்களும் அந்த உரிமைக்காகப் போராடினார்கள். வரலாற்றில் பொறிக்கப்பட்ட முக்கியமான போராட்டம் ரயில்வே தொழிலாளர்கள் 1974இல் நடத்திய தீரமிக்க வேலை நிறுத்தம். அந்தப் போராட்டம் கடுமையான நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டது என்றாலும், பின்னர் அரசாங்கம் அதை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. ரயில்வே தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறை அரசு ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டது. இன்று வரையில் அது வழங்கப்படுகிறது. அண்மையில்கூட ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பை மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.”
போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 12 மாத அடிப்படை ஊதியத்தைக் கணக்கிட்டு, அதிலே குறிப்பிட்ட சதவிகிதம் என்பதாக ஒரு நடைமுறை. பொதுவாகப் பல நிறுவனங்களில் 8.33% போனஸ் வழங்கப்படும். ஆனால், இது கிட்டத்தட்ட ஒரே ஒரு மாத ஊதியம் என்பதாகவே தொழிலாளியின் கைகளுக்கு வரும். எவ்வளவு லாபம் குவித்திருந்தாலும் இவ்வளவுதான் என்று நிர்வாகம், தொழிலாளர்களோடு எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடத்தாமல் அறிவிக்கிறபோது, அதை எதிர்த்துப் போராட்டங்கள் வெடிக்கின்றன. போராட்டங்களுக்குப் பிறகு அரசாங்கத்தின் சார்பிலான அதிகாரிகளும் நிர்வாகப் பிரதிநிதிகளும் தொழிற்சங்கத்தினரும் இடம்பெறும் முத்தரப்புக் குழு அமைக்கப்பட்டு, அதிலே ஒரு முடிவுக்கு வந்து, கூடுதல் போனஸ் அறிவிக்கப்படும். தொழிலாளர் போராட்டத்தால் உற்பத்தி பாதிப்பு என்றெல்லாம் பேசியவர்கள், எழுதியவர்கள், நிர்வாகம் முதலிலேயே பேச்சு நடத்தி இந்தக் கூடுதல் தொகையை அறிவித்திருந்தால் போராட்டமே வந்திருக்காது அல்லவா என்று மறந்தும் கேட்க மாட்டார்கள்.
உச்சவரம்பு சரியா?
இப்படியான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கிற 1965ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த குறைபாடுகள் என்ன? ஊதியம் எவ்வளவானாலும் குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு மேல் – அதாவது அதிகபட்சமாக 20 சதவிகிதத்துக்கு மேல் போனஸ் கிடையாது என்று அந்தச் சட்டத்தில் இருந்தது. குறைந்தபட்ச போனஸ் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டதில் பொருளிருக்கிறது. ஆனால் அதிகபட்சம் இவ்வளவுதான் என்று வரம்பு கட்டுவது எப்படி சரியாக இருக்க முடியும்? நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிற லாபப் பங்கீட்டுக்கு உச்சவரம்பு இல்லை. உழைப்பை முதலீடாக்குகிற தொழிலாளர்களுக்கான பங்கீட்டிற்கு உச்சவரம்பு முடிவு செய்வது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?
ஆகவேதான் அதை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. அதே போல, மாத அடிப்படை ஊதியம் 3,500 ரூபாய் என்ற அடிப்படையிலேயே போனஸ் கணக்கிடப்பட்டது. அதுவும் 10,000 ரூபாய் வரையில் ஊதியம் பெறுகிறவர்களுக்குத்தான். அதற்கு மேல் ஊதியம் பெறுகிறவர்களுக்கு போனஸ் கிடையாது. அப்படியே 10,000 ரூபாய் ஊதியம் பெற்றாலும், போனஸ் கணக்கிடப்பட்டது 3,500 ரூபாய் என்ற ஊதிய அடிப்படையில்தான். அதற்கு மேல் ஊதியம் வாங்கினால் போனஸ் கிடையாது. இதையெல்லாம் திருத்த வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இப்படியான வலியுறுத்தல்கள், போராட்டங்களின் ஒரு வெற்றியாக, 2019ஆம் ஆண்டில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2019ஆம் ஆண்டு சட்டத்தின்படி. போனஸ் பெறுவதற்கான அதிகபட்ச ஊதியம் 21,000 ரூபாய் என்று உயர்த்தப்பட்டுள்ளது. போனஸ் கணக்கிடுவதற்கான குறைந்தபட்ச ஊதியம் 7,000 என்றும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் பொருள், 21,000 ரூபாய் வரையில் ஊதியம் பெறுகிறவர்கள் போனஸ் பெற முடியும். ஆனால், 7,000 ரூபாய் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு அது கணக்கிடப்படும். 7,000 ரூபாய்க்குக் கீழே பெறுகிறவர்களுக்கு? அவர்களைப் பொறுத்தவரையில் உண்மையாக வழங்கப்படும் ஊதியத் தொகை அடிப்படையிலேயே கணக்கிடப்படும்.
மத்திய அமைச்சரவை முடிவுபடி ரயில்வே, அஞ்சல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த 17 லட்சம் அரசிதழ் பதிவற்ற ஊழியர்களுக்கு ரூ.2,791 கோடி, 13 லட்சம் அரசிதழ் பதிவற்ற இதர ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைக்கப்படாத ரூ.946 கோடி என மொத்தம் 30 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தம் 3,737 கோடி ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்குக் கிடைப்பதென்னவோ 8.33% போனஸ்தான். தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு 8.33% போனஸ், 1.67% கருணைத்தொகை என வழங்கப்பட்டுள்ளது. போனஸ் சட்டத்திற்குள் அரசாங்க ஊழியர்கள் கொண்டுவரப்படவில்லை என்றாலும் போனஸ் சட்ட விதிகளின்படியே இந்த முடிவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத் தொழிலாளர்களின் முத்திரை
சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருந்தாலும், நிர்வாகங்கள் அதற்குள் பதுங்கிக்கொள்ளவே முயலும் என்றாலும், அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, அதிகபட்ச போனஸ் வரம்பைத் தாண்டி 40% வரையில் போனஸ் பெற்ற வரலாறுகள் உண்டு. அடிப்படைச் சம்பளத்திலிருந்து அல்லாமல் மொத்த ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் கணக்கிட்டு வழங்கச் செய்கிற சாதனையையும் தமிழகத் தொழிலாளர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். குறிப்பாக கோவை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களின் பஞ்சாலைத் தொழிலாளர்கள் உறுதியோடு நடத்திய போராட்டங்களின் வெற்றிக் குறிப்புகள் அவை.
“இவ்வளவு ஏன்? அவசரநிலை ஆட்சிக்காலத்தில் வெறும் 4% மட்டுமே போனஸ் என்று அறிவிக்கப்பட்டபோது, அன்றைய கெடுபிடிகள், அடக்குமுறைகள் அத்தனையையும் மீறி உழைப்பாளிகள் களமிறங்கினார்கள். பின்னர் போனஸ் முந்தைய அளவுக்கே மாற்றப்பட்டது” என்று தெரிவித்தார் ஏ.கே.பத்மநாபன்.
தமிழகத்தில் போனஸ் அறிவிப்பு பற்றிக் குறிப்பிட்ட அவர், மாநில அரசாங்கம் தொழிலாளர் பிரதிநிதிகளோடு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தாமல், கடைசி நேரத்தில் அறிவித்தது கடும் விமர்சனத்திற்கு உரியது என்றார். ”இந்த போனஸ் மார்ச் மாதம் வரைக்குமானது. கொரோனாவால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் போனஸ் குறைத்து வழங்கப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது. ஆனால் கொரோனா ஆரம்பித்தது மார்ச் மாதத்தில்தானே” என்று கேள்வி எழுப்பினார். ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வார்களா?
தற்போதைய சட்டத்திலும் தொழிலாளர்களுக்குப் பாதகமான விதிகள் அப்படியே தொடர்கின்றன. அவற்றை விலக்கிக்கொள்ள வலியுறுத்திக்கொண்டே, சட்டத்தில் எப்படி இருந்தாலும் நியாயமான, ஓரளவுக்காவது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான போனஸை உறுதிப்படுத்திக்கொள்கிற போராட்டத்தை உழைப்பாளிகள் விட்டுத்தர மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும் போனஸ் என்பது யாருடைய கருணையாலோ வருகிற தானமல்ல, மாறாகத் தங்களுக்குரிய கொடுபடாத ஊதியத்தைக் கொடுத்தாக வேண்டிய உரிமை என்று.