நீண்ட நேரம் நடைபெற்று வரலாற்றில் இடம்பிடித்த பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார். Spain carlos alcaraz win French open Grandslam
பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடந்து வந்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று (ஜூன் 8) இறுதி நாளை எட்டியது.
பிலிப் சார்ட்டியர் களி மண் மைதானத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜானிஸ் சின்னர் இருவரும் மோதினர்.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் முழு கட்டுப்பாட்டில் இருந்த இத்தாலியைச் சேர்ந்த சின்னர், முதல் இரண்டு செட்களை 6-4 7-6 என்ற கணக்கில் வென்றார்.
எனினும் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். நான்காவது செட்டையும் 7-6 என்ற கணக்கில் அவர் கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் இரு வீரர்களும் கடுமையாக போராடினர். எனினும் டைபிரேக்கரில் 10-2 என்ற கணக்கில் வென்று, இறுதி செட்டை 7-6 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கைப்பற்றினார். இதன்மூலம் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை அவர் தக்க வைத்துக்கொண்டார்.
6.30 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டி 5 மணி நேரம் 29 நிமிடங்கள் நீடித்தது. இதன்மூலம் மிக நீண்ட நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டி என்ற 43 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது.
முன்னதாக ஓபன் 1982 இல் நடந்த இறுதிப்போட்டியில் 4 மணி நேரம் 47 நிமிடங்கள் வரை சென்ற நிலையில் மேட்ஸ் விலாண்டர் 1–6, 7–6(8–6), 6–0, 6–4 என்ற கணக்கில் கில்லர்மோ விலாஸை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

சின்னரை பாராட்டிய அல்காரஸ்
கோப்பையை வென்ற பிறகு பேசிய அல்கராஸ், ”சின்னர் நீங்கள் ஒரு முறை அல்ல, பல முறை சாம்பியனாகப் போகிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் உங்களுடன் மைதானத்தைப் பகிர்ந்து கொள்வது ஒரு பாக்கியம். இந்தப் போட்டியில், உங்களுடன் இணைந்து ஒரு வரலாற்றை உருவாக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; நீங்கள் இளம் குழந்தைகளுக்கும் எனக்கும் ஒரு பெரிய உத்வேகம்” என பாராட்டி பேசினார்.
தொடர்ந்து அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், “பாரிஸ், நண்பர்களே, முதல் பயிற்சியிலிருந்து, முதல் சுற்றில் இருந்து நீங்கள் எனக்கு மிகவும் முக்கியமான ஆதரவாக இருந்தீர்கள். நீங்கள் என் மீது பைத்தியக்காரத்தனமாக இருந்தீர்கள். அதாவது, இன்றைய போட்டி மட்டுமல்ல, இந்த வாரம் முழுவதும் எனக்கு நீங்கள் அளித்த சிறந்த ஆதரவிற்கு என்னால் போதுமான நன்றி சொல்ல முடியாது, நீங்கள் எப்போதும் என் இதயத்தில் இருப்பீர்கள். நன்றி, பாரிஸ். அடுத்த வருடம் சந்திப்போம்” என்று அல்காரஸ் பேசினார்.