திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை நிச்சயம் மிகப் படுதோல்வி அடையும்.. இதுதான் சரித்திரம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த குடிமங்கலம் பகுதியில் தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ” SIR என்று அறிவித்ததுமே திமுகவினர் உடனடியாக பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து விட்டார்கள். அதிமுகவை பொறுத்த அளவில் என்றைக்குமே நியாயமாக, நேர்மையாக தேர்தலை சந்திப்போம். கள்ள ஓட்டு போடுவது இல்லை.
அண்ணா திமுகவுக்கு சாதகமான வாக்குகள், பொதுமக்கள் வாக்குகளை சரியான முறையில் சேர்க்க வேண்டும். தேர்தல் வேலையை விட இது முக்கியமான வேலை. 5 மாதத்தில் சட்டமன்ற தேர்தலே முடிந்து விடும். எனவே இந்த பணி மிகவும் முக்கியமானது.
2026 தேர்தலுக்கு பின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்த பிறகு நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் இப்போது வாக்காளர்களாக சேர்க்கப்படுபவர்கள்தான் வாக்களிப்பார்கள். ஆகவே இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
திமுகவிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் ஓட்டு போடமாட்டார்கள். திமுக ஆட்சி போய்விட வேண்டும். அதிமுக ஆட்சி வரவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த மக்களின் குரலாக உள்ளது.
நான் சர்வே வைத்துள்ளேன். இந்த முறை திருப்பூரில் அனைத்து தொகுதிகளிலும் நாம் ஜெயிப்போம். திமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை இது மக்களுக்கு தெரியும்.
மின் கட்டண உயர்வை நினைத்தாலே திமுகவிற்கு ஓட்டு அளிக்க மாட்டார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. திமுகவிற்கு எப்போதும் ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் கூட இந்த ஆட்சி வேண்டாம் என கூறுகிறார்கள். இதனால் அதிமுக அரசு அமைவது உறுதி. இதுவரையிலும் திமுக ஆட்சிக்கு இவ்வளவு கெட்ட பெயர் வந்ததில்லை. அவ்வளவு கெட்ட பெயருடன் திமுக ஆட்சி உள்ளது.
ஒரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் மறுமுறை நிச்சயம் மிக படுதோல்வி அடையும் சரித்திரம் இதுதான்” என்றார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்கள் ஓபிஎஸ் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
