வெடிகுண்டு, பையில் ரூ.1 கோடி.. எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்!

Published On:

| By Selvam

sp velumani receives death threat

ரூ.1 கோடி பணம் கேட்டு அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. sp velumani receives death threat

இதுதொடர்பாக கோவை புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரனை சந்தித்து மே 23-ஆம் தேதி புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில்,

“எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு கடந்த மே 16-ஆம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில் அனுப்பியவரின் பெயர், முகவரி இல்லை. அந்த கடிதத்தில், ஜூலை 30-ஆம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. நாங்கள் உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம்.

எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் உள்ளனர். காவல்துறையிலும் எங்கள் ஆட்கள் உள்ளனர். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். உங்களிடம் நிறைய கறுப்பு பணம் உள்ளது. ரூ.1 கோடி பணத்தை பையில் வைத்து நான் சொல்லும் இடத்தில் வைத்துவிட வேண்டும்.

sp velumani receives death threat

அந்த பணப் பையை மே 25-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள் காளப்பட்டி – வெள்ளாணைப்பட்டி சாலை கலியபெருமாள் குட்டை அருகேயுள்ள குப்பைமேட்டில் வைத்து விட்டு சென்று விடவும். எனது ஆட்கள் பையை எடுத்துக்கொள்வார்கள்.

மூன்று நாட்களுக்கு பிறகு அதே இடத்தில் அதே பையில் இமெயில் ஐடியுடன் ஒரு ரகசிய குறியீட்டை பெறுவீர்கள். கொடுக்கப்பட்ட மின்னஞ்சலுடன் ஒரு குறியீட்டை பகிரவும். இப்படி செய்தால் எங்கள் பக்கத்தில் இருந்து எந்த பிரச்சனையும் வராது. பணப்பையில் ஜிபிஎஸ் டிராக்கிங் வைக்க வேண்டாம்.

நீங்கள் காவல்துறையிடம் சென்றாலோ, எங்களை பிடிக்க முயற்சித்தாலோ உங்கள் குடும்பத்தில் உள்ள மூன்று பேரையும் மூன்று மாதங்களுக்குள் கொல்வோம். இது வெறும் தகவல் அல்ல, எச்சரிக்கை என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து எஸ்.பி.வேலுமணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கோவையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். கொலை மிரட்டல் விடுத்தவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. sp velumani receives death threat

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share