“பதவி ஆசை எங்களுக்கு இல்லை!” – அதிமுக உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

By Pandeeswari Gurusamy

|

Published on 27 May 2026, 3:53 PM

ADMK

அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கி விட்டது. எங்களுக்கு பதவி ஆசை இல்லை என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்த நிலையில் இரு தரப்பிலும் நடவடிக்கை கோரி வழங்கப்பட்ட கடிதங்களை திரும்பப் பெறுவதாக பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆசை இல்லை

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு, சட்டமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான சில நிலைப்பாடுகள் குறித்தும், கட்சியின் உத்திகள் குறித்தும் சில கருத்துகளை நாங்கள் முன்வைத்திருந்தோம். மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தால் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தோம். பதவி ஆசை இல்லை என்பதை நாங்களும் தெரிவித்திருந்தோம். ஆளும் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சூழ்நிலையில், எங்களது தரப்பைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதி நீக்கம் கோரி அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மனு அளித்திருந்தார்.

அதேபோல, எங்களது தரப்பிலிருந்து அண்ணன் சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் மற்றும் நான் உட்பட, அவர்களின் தரப்பைச் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தகுதி நீக்க மனுக்களை அளித்திருந்தோம். தற்போது இருதரப்பும் சுமுகமாகப் பேசி, அந்த இரண்டு தகுதி நீக்க மனுக்களையும் முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொண்டோம். இதுகுறித்த கடிதத்தை பேரவைத் தலைவரிடமும் முறைப்படி சமர்ப்பித்துள்ளோம்” என்றார்.

ADVERTISEMENT

பிளவல்ல, அது கருத்து வேறுபாடு

“அதிமுகவில் பெரிய பிளவு ஏற்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். அதனால், எங்களுக்குள் இருந்தது தற்காலிகக் கருத்து வேறுபாடே தவிர, பிளவு அல்ல என்பதை ஆரம்பத்திலிருந்தே தெளிவுபடுத்தி வருகிறோம். அம்மா காலத்தைப் போல தேர்தல் தோல்விக்குப் பின், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆராய வேண்டும், பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், இதற்கென தனிக் குழு அமைக்க வேண்டும் போன்ற சில கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்திருந்தோம்.

அதைப் பொதுச்செயலாளர் ஒன்றன்பின் ஒன்றாகப் பரிசீலிப்பதாகக் கூறி உள்ளார். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது. இனி ஒற்றுமையாக அதிமுக வலுவோடு செயல்படும். கட்சி எங்களுக்கு உயிர்” என்றார்.

ADVERTISEMENT

சி.வி. சண்முகம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். எந்தப் பிரச்சினையும் இல்லை. கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டுள்ளது” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel