பல்வேறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கும் யூடியூபர் சவுக்கு சங்கர் பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் போலீசாரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வில் சவுக்கு சங்கரின் செல்போனுக்கு திமுகவை சேர்ந்தவர்களில் சிலரும், அமைச்சர்கள் சிலருமே அவ்வப்போது தொடர்புகொண்டு பேசியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மின்னம்பலத்தில் சவுக்கு சங்கருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக சங்கருடைய செல்போனுக்கும் அவருடைய செல்போனில் இருந்தும், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி டவர்களில் இருந்து தொடர்ந்து நீண்டகாலமாக அழைப்புகள், தகவல் பரிமாற்றங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரது தரப்பினர் சவுக்கு சங்கருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்று போலீஸ் கருதுகிறது.
இதுஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் சங்கர் மீது வழக்குகள் குவிந்து வரும் நிலையில், அவருக்காக வேலுமணி மூத்த வழக்கறிஞர்களை அமர்த்துவதற்கு முயற்சி செய்து வருகிறார்.
ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷண் நல்ல அறிமுகம் கொண்டவர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நீதிபதிகளுக்கு எதிராக சவுக்கு சங்கர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டபோது, சங்கருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் பிரஷாந்த் பூஷண்.
இப்போது வேலுமணி தரப்பில் அவரை அணுகியபோது அவர் ஆர்வம் காட்டாததால், வேறு சில உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை தொடர்புகொண்டு வருகிறார்கள் வேலுமணி தரப்பினர்.
வேந்தன்