கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஒருங்கிணைத்த சுப.உதயகுமாருக்கு எதிராக கடந்த 2013-ஆம் ஆண்டு லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் அறிவிப்பாணை) பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், தன் மீதான லுக் அவுட் நோட்டீஸை நீக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவிற்கு சுப.உதயகுமார் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில்,
“கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக எங்கள் பகுதி பொதுமக்கள் நடத்திய அமைதியான அறவழிப் போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக என் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டன.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, வள்ளியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவோம் என்று நீங்களே உறுதியளித்தீர்கள்.
ஆனால், மேற்படி போராட்டத்தைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 07.11.2013 அன்று C.No.51/X/SB/TIN/2012 எனும் எண் கொண்ட கடிதத்தின் மூலம் சென்னையிலுள்ள முதன்மை குடியேற்ற அதிகாரியிடம் (Chief Immigration Officer) முறையிட்டு என்மீது “தேடப்படும் அறிவிப்பாணை”ஒன்றைப் பெற்றார்.
இந்த அறிவிப்பாணையை நீக்குவதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பளித்த பிறகும், இரண்டாவது தீர்ப்பு என் மீது விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் முறைப்படி நிறைவேற்றி, இராதாபுரம் நீதிமன்றத்திடமிருந்து உரிய ஆமோதிப்பைப் பெற்ற பிறகும், தமிழ்நாடு காவல்துறையும், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர்.
டெல்லியிலுள்ள உள்துறை அமைச்சக துணை இயக்குனர் ஒருவருக்குப் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிவித்துவிட்டு, பிரச்சினையை இழுத்தடிக்கின்றனர்.
எனவே தாங்கள் தயவுசெய்து இந்தப் பிரச்சினையில் தலையிட்டு என் மீது போடப்பட்டிருக்கும் “தேடப்படும் அறிவிப்பாணை”யை நீக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வருக்கு அப்பாவு கடிதம்!
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: பறிபோன 2000 உயிர்கள்… ‘அத்திப்பட்டி’யான கிராமம்!