கால நிலை மாற்ற பாதிப்பை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை, பெண்ணுரிமையை வலியுறுத்தி இன்று(அக்டோபர் 3) ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் சௌமியா அன்புமணி பேசினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 57வது அமர்வு சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கிய இந்த அமர்வு இம்மாதம் 9ஆம் தேதிவரை நடைபெறும்.
இந்த அமர்வில் பசுமை தாயகம் அறக்கட்டளையின் தலைவரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி இன்று (அக்டோபர் 3) பேசினார்.
காலநிலை மாற்றம் பூமியில் உள்ள அனைத்து மக்களையும் பாதிக்கிறது, குறிப்பாக வளரும் நாடுகளில் இருக்கும் பெண்களை அது அதிகமாகப் பாதிக்கிறது.
பாலின சமத்துவமின்மை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு, விவசாயம், சுகாதாரம், ஊட்டச்சத்து, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இடப்பெய்ர்வு போன்ற விஷயங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கிறது.
வளர்ந்துவரும் நாடுகளில் பெண்கள்தான் பெரும்பான்மையாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதனால் காலநிலை மாற்றத்தால் அதிகரித்துவரும் புயல், வெள்ளம் போன்ற பேரிடர்கள் பெண்களைத்தான் அதிகமாகப் பாதிக்கிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம், கல்வி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பதின்ம வயது பெண்கள் பள்ளி கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்துகிறார்கள்.
இதற்கு ஒரே தீர்வு, பெண்களுக்குக் கல்வி, நில உரிமை, போன்றவை வழங்கப்பட வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பெண்களை ஈடுபடுத்த வேண்டும்.
வளர்ந்த நாடுகள் தான் கால நிலை மாற்றத்திற்கான பசுமைக்குடில் வாயுக்கள் மற்றும் பிற வாயுக்களை அதிக அளவில் வெளியிடுகிறது. ஆனால் இதன் விளைவுகளை பெரும்பான்மையாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் சிறு தீவுகள் சந்தித்து வருகின்றன.
அதனால் வளர்ந்த நாடுகள் உடனடியாக தங்களது உமிழ்வுகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பாலின சமத்துவம் மற்றும் அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவேண்டும்” சௌமியா அன்புமணி கேட்டுக்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அப்துல் ரகுமான்
“அந்த இயக்குநர் என்னை அறைந்தார்”: நடிகை பத்மபிரியா
முன்ஜாமீன் நிபந்தனை : பொன்.மாணிக்கவேல் கோரிக்கை ஏற்க மறுப்பு!