ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா அணி!

Published On:

| By Balaji

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. இதில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 287 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் 85 ரன்னும், கே.எல்.ராகுல் 55 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 40 ரன்னும் எடுத்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலானும், டி காக்கும் இறங்கினர். தொடக்கம் முதல் டி காக் அதிரடியாக ஆடினார். இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை எளிதில் பிரிக்க முடியவில்லை. இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த நிலையில், டி காக் 78 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மலான் 91 ரன்னில் வெளியேறினார். அப்போது தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பவுமா 35 ரன்னில் அவுட்டானார்.

ADVERTISEMENT

அடுத்து இறங்கிய மார்கிரமும், வான் டெர் டுசனும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். மார்கிராம் 37 ரன்னுடனும், வான் டெர் டுசன் 37 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இறுதியில், தென்னாப்பிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ஏற்கெனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்க அணி, இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ADVERTISEMENT

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share