தென்னாப்பிரிக்காவில் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் 20 பேர் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து சுமார் 1,000 கிமீ தொலைவில் உள்ள நகரம் தெற்கு லண்டன். இங்கு சில இளைஞர்கள் தங்கள் பள்ளி பரீட்சைகள் முடிந்த நிலையில் அதைக் கொண்டாடுவதற்காக ஓர் இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 26) அதிகாலை அந்த இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த போலீஸார் உடல்களைக் கைப்பற்றி, அந்த இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சீல் வைத்தனர். சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று மதியம் உயிரிழந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்த மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இத்தனை உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும் இறந்தவர்களின் உடலை போலீஸார் உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மருத்துவமனைக்கு முன்பு இறந்தவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இறந்த யாருமே நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.