12 மணி நேர வேலை: “இன்று இரவிற்குள் திரும்ப பெறாவிட்டால் போராட்டம்”: சவுந்தரராஜன்

Published On:

| By Selvam

இன்று இரவிற்குள் 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் தொழிற்சங்கங்கள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்

12 மணி நேர வேலை சட்ட திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இன்று நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த ஆலோசனை கூட்டத்தில் சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி, தொமுச உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன் பேசியபோது,

ADVERTISEMENT

“12 மணி நேர வேலை சட்ட திருத்தம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த சட்டத்தை எற்க முடியாது.

நேற்று 9 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதனை இன்று அமைச்சர்களிடம் அளித்துள்ளோம்.

ADVERTISEMENT

தொழிற்சங்கங்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து செல்வோம். அவர் இதுகுறித்து நல்ல முடிவை எடுப்பார் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் உரிமையை பறிகொடுத்து விட்டு தமிழக அரசிற்கு லாபம் வந்து என்ன புண்ணியம். ஜி20 கூட்டமைப்பில் உள்ள எந்த நாடுகளும் எட்டு மணி நேரத்தை தாண்டி வேலை வாங்கவில்லை.

ஐடி ஊழியர்களுக்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள் தொழிலாளர் சட்டத்திற்குள் வர மாட்டார்கள்.

Staff and Establishment Act-ன் கீழ் தான் ஐடி ஊழியர்கள் வருவார்கள். அமைச்சர்கள் இந்த சட்டம் குறித்து கொடுத்த விளக்கங்கள் எதுவும் சரியாக அமையவில்லை.

தொழிலாளர்கள் விரும்பினால் வேலை செய்யலாம் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தான்.

சட்டத்தில் எந்த இடத்திலும் அப்படி இல்லை. தற்போது 8 மணி நேரம் வேலை உள்ள நிலையில் பல நிறுவனங்கள் தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள்.

8 மணி நேர வேலையை அகற்றுவதாக தான் இந்த சட்ட திருத்தம் உள்ளது. இதனால் தொழிலாளர்களை 15 அல்லது 16 மணி நேரம் கூட வேலை வாங்கலாம். ஆகவே இந்த சட்டத்தை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் உழைப்பு சுரண்டலும் அடிமைத்தனமும் நடக்கும். தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

தொழிற்சங்கங்களிடம் கலந்தாலோசிக்காமல் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று இரவிற்குள் 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெறாவிட்டால், நாங்கள் அறிவித்தபடி ஏப்ரல் 26 முதல் மே 12 வரை பலகட்ட போராட்டங்கள் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

சச்சினை கவுரவித்த சிட்னி கிரிக்கெட் மைதானம்!

12 மணி நேர வேலை: திமுக தொழிற்சங்கம் தொமுச எதிர்ப்பு!

soundararajan urge tamilnadu government
Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share