ஒரு சுயாதீன இயக்குநரின் திரைப்படத்திற்கு திரையரங்குகளில் இத்தகைய ஓப்பனிங் இருப்பது தமிழ் சினிமாவில் முதல் முறையாகும்.
இந்திய சினிமாவின் அடுத்த கட்ட முன்னெடுப்பு சுயாதீன சினிமா தான் என்று முழுமையாக சொல்ல முடியாது என்றாலும் அதற்கான முதல் படியாகவே பி.எஸ். வினோத் ராஜின் ‘ கொட்டுக்காளி ‘ திரைப்படத்தை பார்க்க முடிகிறது.
இது வர்த்தக சினிமாவில் நடந்தமைக்கு முக்கிய காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சூரியின் சமீபத்திய அசுர வளர்ச்சி. வர்த்தக சினிமாவில் இத்தகைய மாற்றம் நடைபெறுவது தமிழ் சினிமாவிற்கு மிக ஆரோக்கியமான விஷயமே.
ஒன்லைன்:
மதுரையை சேர்ந்த கிராமத்து இளைஞர் சூரி. அவரது முறைப் பெண்ணாக அன்னா பென். ஆனா பென்னுக்கு பேய் பிடித்ததாக சொல்லப் படுகிறது. அதை ஓட்டுவதற்காக ஒரு சாமியாரிடம் அழைத்து செல்ல கிளம்புகின்றனர் சூரி மற்றும் குடும்பத்தினர். இந்தப் பயணத்தில் வரும் தடங்கல், அதில் வெளி வரும் கதாபாத்திரங்களின் நோக்கங்கள், அந்த நிலத்தின் வாழ்வியல் இதுவே ‘ கொட்டுக்காளி ‘.
அனுபவ பகிர்தல் :
இந்தத் திரைப்படம் ஏற்கனவே பெர்லின் திரைப்பட விழா உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. அப்படிப் பட்ட ஒரு முழு சுயாதீன தன்மை கொண்ட கலைப் படத்தை நம்ம ஊர் கமலா தியேட்டரில் முதல் காட்சி பார்த்த அனுபவமே தனி தான்.
படத்தின் தொடக்கம் முதல் எண்டு கார்டு வரை எந்த வித இசையும் இல்லாது இருந்த ஒரு படத்தை அவ்வளவு மக்களுடன் பார்த்தது புதுமையாக இருந்தது. படத்தின் தொடக்கத்தில் இத்தகைய திரைமொழிக்கு பழக்கம் இல்லாத சிலர் கூச்சலிட்டதையும் காண முடிந்தது.
ஆனால், மெல்ல மெல்ல அந்தக் கதாபாத்திரங்களின் பயணத்திற்குள் நம்மை கொண்டு செல்லும் ‘ கொட்டுக்காளி ‘ நம்மை சுவாரஸ்யமாக வைத்திருக்கவும் தவறவில்லை.
நாமும் அவர்களுடன் பயணித்து அவர்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ளும் படி எழுதப்பட்ட திரைக்கதை நம்மை பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்தது.
தற்காலத்தில் நம்முடன் சேர்ந்து வாழும் காட்டுமிராண்டிகள் , நமக்குள் இருக்கும் காட்டு மிராண்டித் தனங்கள், பெண்கள் குறித்த பிற்போக்கான பார்வை போன்றவற்றை கிளாஸ் எடுக்காது கிளாசிக் காட்சிகளாய் கடத்தியிருந்தது. நம் ரசனைக்கு தீனி போடும் விதமாக இருந்தது.
ஜனரஞ்சக சினிமாவில் கடைபிடிக்க முடியாத ஒரு திரைமொழியை கையில் எடுத்து அதற்குள் வெகுஜன பார்வையாளர்களை சிரிக்க வைப்பது, கை தட்ட வைப்பது அவ்வளவு எளிதில் நடந்தது அல்ல என உணர முடிந்தது.
விரிவான விமர்சனம் :
படமெங்கும் இருந்த பல்வேறு டிராக்கிங் ஷாட்கள் நம்மை திரைக்குள்ளே நிகழும் வாழ்விற்குள் கொஞ்சம் கொஞ்சமாக இணைக்கும் படி கையாளப்பட்டிருந்த திரைமொழி பு. எஸ். வினோத் ராஜின் தனிச் சிறப்பு. ஒரு கதாபாத்திரத்தின் நோக்கம், முன் கதை ஆகியவற்றை அந்த கதாபாத்திரத்தின் நடவடிக்கை மூலமே நாம் புரிந்துகொள்ளும் படி எழுதப்பட்டிருந்த விதம் பார்வையாளர்களின் மதியை இயக்குநர் மதிப்பதாகவே பட்டது.
படத்தின் முதன்மையான பிளஸ் பாயின்ட் நடிகர்களின் நடிப்பு. சூரி, அன்னா பென் தொடங்கி ஊர்க்காரர்களாக நடித்த அத்தனை பேரும் மிக இயல்பாக திரையில் உள்ளனர். குறிப்பாக, ஆதிக்க சமூகத்தில் பிறந்த மடத் தனமான கோபம் கொண்ட இளைஞராகவே திரையில் தெரிகிறார் சூரி. அவர் எந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கியுள்ளார் என்பதற்கு ஒரு பெரிய களேபிர காட்சிக்குப் பிறகு அவர் நடக்கும் நடையே சான்று.
பல்வேறு உணர்ச்சிகளை தனக்குள் பூட்டி வைத்து கண்களால் மட்டுமே பல்வேறு மொழி பேசும் அன்னா பென், குடும்பம் எனும் வலைக்குள் தங்களுக்கான பெருமைகளை தேடி வாழும் சூரியின் அக்கா, தங்கை, எதுவும் செய்ய இயலாது தவித்து நிற்கும் அன்னா பென்னின் பெற்றோர், ஆதிக்க நிலையின் உச்சத்தில் இருக்கும் சூரியின் அப்பா என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மன நிலையும் நாமே அவர்களுடன் பயணித்து தெரிந்துகொள்வதாய் அமைக்கப்பட்டிருந்தது.
ஒளிப்பதிவாளர் சக்தி வேலின் பல்வேறு நீண்ட நெடிய காட்சிகள் அந்த வாழ்வியலை பற்றியும், அந்த பயணத்தின் உணர்வையும் நமக்குள் கடத்துகிறது. ஆனால், ஒரு சில ரிப்பீட் காட்சிகள் சற்று அயர்ச்சியைத் தருவதும் உண்மையே. இசை வேண்டாம் என முடிவெடுத்தது படத்தின் எதார்த்த தன்மைக்கு வலு சேர்க்கிறது. பல மென்சோக காட்சிகளுக்காக இடங்களையும் தவிர்த்துள்ளார் இயக்குநர் வினோத் ராஜ்.
இந்தப் படத்தின் நோக்கம் சரி, தவறு என்கிற தீர்மானங்களை தாண்டி நடப்பதை நம்மிடத்தில் காண்பிப்பதே. அதற்குள் இருக்கும் நியாயங்களை நாமே உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற கதைகளில் முறையான தீர்வு தராது மக்களிடத்தில் அதை ஒப்படைப்பது குறித்து பலருக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், இதை இப்படியான ஒரு மொழியில் சொன்னதே இந்தப் படத்தின் தனிச் சிறப்பு.
கால்கள் கட்டிய சேவல், சிறுமிக்கு அடங்கும் காளை, ஆட்டோவை அப்படியே திருப்பி போடும் ஆண்கள், என படமெங்கும் பல உவமைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. நீண்ட நெடிய டீகோடிங் கட்டுரை எழுதுபவர்களுக்கு நல்ல கண்டண்ட் கிடைத்துள்ளது. ஆனால், இப்படியான திரை மொழி கொண்ட ஒரு முழு நேர படத்தில் சில உவமைகளை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றியது. ஏனெனில் நமக்கு அது நன்றே புரிந்த பிறகும் அதை மீண்டும் மீண்டும் பார்ப்பது சுவாரஸ்யம் தரவில்லை.
கதாபாத்திரங்கள் பேசும் மதுரை வட்டார வழக்கு , எதார்த்த வசனங்களுக்கு திரையரங்குகளில் பலத்த கைதட்டல்களை காண முடிந்தது.
இந்தப் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுவது இதுபோன்ற சில காட்சிகளே. சாதி வெறி, ஆண் ஆதிக்கம், கல்வியின்மை, மூட நம்பிக்கை, ஆணவ கொலை, பழமைவாதம் , உறவுகளுக்குள் பின்னிக் கிடக்கும் அடக்குமுறை எனப் பல்வேறு விஷயங்களை முன்னர் கூறியது போல கிளாஸ் எடுக்காமல் கிளாசிக் காட்சிகளாக்குகிறது ‘ கொட்டுக் காளி ‘. மொத்தத்தில் இது போன்ற கலைப் படங்களை பார்க்காத பார்வையாளர்களை கூட ஓரிரு இடத்திலாவது சுவாரஸ்யப் படுத்தவும், சிந்திக்க வைக்கவும் தவறாது இந்த ‘ கொட்டுக்காளி ‘. படத்தை அவசியம் தியேட்டரில் கண்டு அனுபவத்தை பெறுங்கள்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் இணையும் குருவாயூர் காம்போ!
சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
உலகின் வலிமையான புட் பிராண்ட் அமுல்… சாதித்தது எப்படி?