இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி நடித்துள்ள ‘கொட்டுக்காளி ‘ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சுயாதீன சினிமாக்களின் முன்னெடுப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதற்கு காரணம் உலக சினிமாக்களின் தாக்கம், தொழில் நுட்ப வளர்ச்சி, குறும்பட இயக்குநர்களின் வருகை எனப் பலவற்றைக் கூறலாம். சுயாதீன திரைப்படங்கள் என்றால் வெறும் பொருளாதார ரீதியாக சுயாதீனமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மட்டும் அடங்காது.
இங்கு கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகள், வழிமுறைகள், சிந்தனை என அனைத்தையும் உடைத்து கலையை மட்டும் மூலதளமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் தான் சுயாதீன திரைப்படங்கள்.
அப்படி தமிழ் சுயாதீன சினிமாவின் உச்சமாக ‘ கொட்டுக்காளி ‘ திரைப்படம் இருக்கக் கூடும் என தற்போது வெளியாகியுள்ள அந்தப் படத்தின் டிரெய்லர் மூலம் தெரிகிறது.
எந்த ஒரு இசையும் இல்லாது கோழிகளின் சப்தம், ஷேர் ஆட்டோவின் சப்தம், ஊர் மக்களின் சப்தம், என அந்த வாழ்வியலின் சப்தங்களே டிரெய்லரின் பின்னணியில் ஒலித்தது தொட்டு பல விஷயங்களில் நம்மை வியக்க வைக்கிறது இந்த டிரெய்லர்.
சூரியின் பண்பட்ட நடிப்பு, ஒவ்வொரு துணை நடிகர்களின் முகங்களில் தெரியும் பேருணர்ச்சி, கேமராக்கள் காட்டும் அந்த உலகம் என ஒரு புது வகையான சிறந்த டிரெய்லர் எனவும் இதைச் சொன்னால் அது மிகையாகாது.
பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏற்கனவே பெர்லின் திரைப்பட விழா உட்பட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் வாங்கியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்தகைய சுயாதீன சினிமா ஜனரஞ்சக மார்கெட்டிற்கு இவ்வளவு பெரிய அளவில் வருவதற்கு முக்கிய காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன். மறுபக்கம், நடிகர் சூரியின் தற்போதைய மார்கெட்.
இத்தகைய சுயாதீன திரைப்படம் வெகு ஜன மக்கள் கையில் வந்து சேருவது தமிழ் சினிமாவிற்கு மிக ஆரோக்கியமான ஒரு விஷயமாகும். இந்தத் திரைப்படத்தில் சூரியுடன் சேர்ந்து மலையாள நடிகை ஆனா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் அவருக்கு இதுவே முதல் திரைப்படமாகும்.
இந்தநிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த டிரெய்லரைக் கண்ட மக்களும் திரையுலகினரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
அமெரிக்க தேர்தல்: டிரம்ப் உடன் கை கோர்த்த எலான் மஸ்க்- கமலா ஹாரிஸ் ரியாக்ஷன்!
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட காரணம் தெரியுமா? இ சாலா அணியின் முன்னாள் கேப்டன்தான்!